விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகப்படுத்தும் கூட்டம் இந்தியா கூட்டணி சார்பில், இன்று (ஜூன் 14) மாலை விக்கிரவாண்டியில் தொடங்கியது.
முன்னதாக இன்று காலை விழுப்புரம் அறிவாலயத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார் புதிய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கௌதம சிகாமணி.
இந்த கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு, மத்திய, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அமைச்சர் பொன்முடி, வேட்பாளர் சிவாவை அறிமுகம் செய்து வைத்தார்.
சிவா பேசும்போது, “1985-இல் திமுக வேட்பாளரை ஆதரித்து போடுங்கம்மா ஓட்டு உதயசூரியன் சின்னத்தை பார்த்து என வாக்குகள் சேகரித்த என்னை இன்று வேட்பாளராக அறிவித்துள்ளது தலைமை” என்று கண்கலங்கினார்.
தொடர்ந்து, “1995-இல் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு போலீஸ் தடியடிக்கு ஆளானேன். என்னை வேட்பாளராக அறிவித்த தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி, “மாவட்ட செயலாளர் புகழேந்தி உடல்நிலை சரியில்லாமல் காலமானார். அவருக்கு முன்பு மாவட்ட செயலாளராக இருந்த எம்எல்ஏ ராதாமணி இறந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது. அவரது நினைவு நாளில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம். அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறோம். இந்த தேர்தலில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சிவாவை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.
அமைச்சர் பொன்முடி பேசும்போது, “இது நமக்கு சவாலான தேர்தல். அதனால் நாம் இரவு பகல் பாராமல் உழைத்து அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சிவாவை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று உரையை முடித்தார்.
இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி பகுதியில் பெரிய அரிசி ஆலை வளாகத்தில் உள்ள சுமார் ஆயிரம் மூட்டை நெல் காய வைக்கும் களத்தில் இருக்கைகள் அமைத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் தொடங்கியது.
மாவட்ட பொறுப்பாளராக கெளதம சிகாமணி பொறுப்பேற்ற பிறகு, அவர் நடத்தும் முதல் கூட்டம் என்பதால் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடுகளை செய்தார்.
அமைச்சர் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன், அன்பில் மகேஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் லோக்கல் நிர்வாகிகள் முதலில் பேச ஆரம்பித்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், “அன்னியூர் சிவா தொகுதிக்கு மிகவும் அறிமுகமானவர். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து கொஞ்ச நேரத்திலேயே கூட்டம் கலைய தொடங்கியது. மூன்று பக்கமும் திறப்பு கொண்ட களம் என்பதால், மூன்று திசைகளை நோக்கியும் கூட்டத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பித்தனர்.
மேடையில் இருந்து இதை பார்த்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அமைச்சர் பொன்முடியிடம், ‘என்னங்க இது?’ என கூட்டத்தை காட்டி கேட்க, பொன்முடியால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் குறித்த நேரத்திற்கு முன்பே வேட்பாளர் அறிமுக கூட்டத்தை, முடிக்க ஆலோசித்தனர் அமைச்சர்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஆக்கிரமிப்பு… ஆக்ஷனில் இறங்கிய ஆணையர்!