யாருக்கு ஓட்டு? ஏன், எதற்காக? -விக்கிரவாண்டி மக்களின் பேட்டி!

அரசியல்

வரும் ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்கும் நிலையில்… தொகுதி முழுதும் திருவிழாக் கோலமாக உள்ளது.

விக்கிரவாண்டி என்ற சிறு நகரத்தில் தொடங்கி காணை, கோலியனூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள கிராமப் பகுதிகள் என தொகுதி முழுமையும் மின்னம்பலம் சார்பில் ஜூலை 7 ஆம் தேதி வலம் வந்தோம்.

விவசாயமே பிரதான தொழிலாக இருக்கும் இப்பகுதியில் நெற்பயிர்களும், கரும்பும் நம் கண்ணை நிறைக்கின்றன.

வன்னியர்கள், பட்டியல் சமுதாய மக்கள், மற்றும் பல்வேறு சமுதாயத்தவர் வாழும் இத்தொகுதிக்குள் நகரம் முதல் கிராமங்கள் வரை எல்லா பகுதியிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பதிவெண் கொண்ட சொகுசு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆங்காங்கே குழு குழுவாக திமுக, பாமக, நாம் தமிழர் என வெளியூர் கட்சிக்காரர்கள் திரிந்துகொண்டிருந்தார்கள்.

ஆங்காங்கே ஊர் மக்களை கொத்துக் கொத்தாக திமுகவினரும், பாமகவினரும் திரட்டி வைத்துக் கொண்டு கூட்டம் போட்டுக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

விக்கிரவாண்டி நகரத்தில் வசிக்கும் புஷ்பா என்ற பெண்மணியிடம் பேசினோம்.

“அவங்கவங்க சத்துக்கு ஏத்த மாதிரி கட்சிக்காரங்க செஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க. தேர்தல்னு வந்துட்டா நாங்களா கேட்குறோம்? அவங்களாதான் கொடுக்குறாங்க. எனக்கு கருணாநிதி காலத்துல மொத மொதல்ல ஓ.ஏ.பி. 100 ரூவா கொடுத்தாரு. அது இப்ப எனக்கு 1000 ரூபாய்க்கு மேல வந்துக்கிட்டிருக்கு. எனக்கு ஸ்டாலின் எதுவும் செய்யலை. கருணாநிதிதான் செஞ்சாரு. அதனால என் ஓட்டு என்னைக்கும் உதயசூரியனுக்குதான்” என்றார் வித்தியாசமாய்.

புஷ்பா

புஷ்பாவின் வார்த்தைகளில் இருந்து ஒன்று தெரிகிறது. சமூக நலத் திட்டங்கள் தேவையில்லாதவர்களுக்கு செல்கிறது என்ற பொதுவான புகார்கள் இருந்தாலும்… தேவையுள்ளவர்களுக்கும் செல்கிறது. அதுமட்டுமல்ல, ஓர் ஆட்சி கொண்டுவந்த சமூக நலத் திட்டத்தை எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உயர்த்ததான் முனையுமே தவிர குறைக்க முடியாது என்பதையும் உணர்த்தியது.

காணை ஒன்றியத்தில் கஞ்சனூர் கிராமத்தை ஒட்டி வயல்களில் ஆடு மேய்த்தபடி வரப்போரம் அமர்ந்திருந்தார் சம்மணசுநாதன். அவரிடம், ‘இடைத் தேர்தல் எப்படி போயிட்டிருக்கு? நீங்க யாருக்கு ஓட்டு போடறதா உத்தேசம்?’ என்று கேட்டோம்.

சம்மணசுநாதன்

‘இந்த ஆடுகள்தான்ய்யா எனக்கு வாழ்க்கை. 63 வயசாகுது. எங்க அண்ணன் திமுக, நான் அதிமுக. அம்மா இறந்ததுக்குப் பிறகு நான் தினகரன் கட்சியில சேர்ந்துட்டேன். எங்க ஊட்ல எனக்கும் எம் பொண்டாட்டிக்கும் ஓட்டுக்கு ஆயிரம்னு திமுக இதுவரைக்கும் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க. ஆனா நான் கூட்டணியில இருக்கேன். எனக்கு கொள்கை இருக்கு. நான் மாம்பழத்துக்குதான் ஓட்டுப் போடுவேன்” என்றார்.

அவரிடம் விடைபெற்ற நம்மை, ‘இங்க வாங்க…’ என்று மீண்டும் அழைத்தார்.
‘பக்கத்துல கள்ளக்குறிச்சியில கள்ளச்சாராயத்தை குடிச்சுட்டு பல பேரு செத்துப்பூட்டாங்களே அதை பத்தி கேட்க மாட்டீங்களா?’ என அவரே கேள்வி எழுப்பி,

‘கள்ளச்சாராயத்தை குடிச்சுட்டு செத்தவங்க புள்ளைகளுக்கும் பொண்டாட்டிக்கும் 10 லட்சம் கொடுத்திருக்காரு ஸ்டாலின். அந்த பணத்தை வச்சிக்கிட்டு அப்பானு கூப்பிட முடியுமா? தாத்தானு பாக்க முடியுமா? முதல்ல கள்ளச்சாராயத்தை எல்லாம் ஒழிக்க சொல்லுங்க. அப்புறம் ஓட்டு கேட்டு வரலாம்” என்று கோபத்தில் பொங்கினார் சம்மணசு.

கொஞ்ச தூரம் சென்ற நிலையில்  நெல்பயிரில் மாடு மேய்ந்திடாதபடி கயிற்றைப் பிடித்துக் கொண்டு வரப்பில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் பன்னீர்செல்வம்.

பன்னீர்செல்வம்

இடைத் தேர்தல் பற்றி கேட்டதுமே, ‘இங்க திமுக, பாமக, சீமான் மூணுதான் இப்ப வெயிட் கட்சி. திமுக ஓட்டுக்கு ஆயிரம் ரூபா கொடுத்துட்டாங்க. அப்புறம் தெனமும் ஓட்டு கேட்க அழைச்சிட்டுப் போகறதுக்காக பொம்பளைங்களுக்கு 100, 200 ரூபா கொடுக்குறாங்க.

திமுக காரங்க ஆயிரம் ரூபாய்ன்னா பாமக காரங்க நேத்துலேர்ந்து (ஜூலை 6) ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துக்கிட்டிருக்காங்க. ஆனா ஒன்ணு… பாமக காரங்க பணம் காலனி பக்கம் கொடுக்குறதுல்ல. ஊருக்குள்ள அவங்க ஓட்டுக்கு மட்டும்தான் கொடுக்குறாங்க.

எங்களுக்கு இந்த பணமெல்லாம் முக்கியம் இல்லங்க. எங்களை ஒழுங்கா விவசாயம் பண்ண விடுங்க போதும். விவசாயத்துக்கு என்ன தேவையோ அதை செய்யுங்க போதும். ஏக்கருக்கு விவசாயம் பண்ண 35 ஆயிரம் செலவாகுது. ஆனா அறுவடையில 20 ஆயிரம் வந்தா பெரிசு. நெலத்தை சும்மா போடக் கூடாதுன்னுதான் விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கோம்” என்று சொல்லிக் கொண்டே மாட்டை இழுத்துப் பிடித்தார்.

நாம் சென்றுகொண்டிருக்கும்போது அகரம் சித்தாமூர் பகுதியில் ஒரு கோயில் வாசலில் சுமார் இருபது முதல் இருபத்தைந்து பெண்கள் கூடியிருந்தனர். அதில் ஒரு பெண் நடு நாயகமாக அமர்ந்து மற்ற பெண்களிடம் 100 நாள் வேலைக்கான அட்டையை வாங்கி சரிபார்த்துவிட்டு புடவையை ஒவ்வொருவருக்காய் வழங்கினார். அவர்கள் பேச்சில் இருந்து திமுகவுக்காக அவர்கள் ஓட்டு சேகரிப்பது தெரிந்தது.

ஒரு பெண், ‘யக்கா… எனக்கு கொடுத்த சேலை கலர் நல்லா இல்லை. வேற சேலை கொடேன்’ என்று கேட்க, அந்த தலைமைப் பெண்மணி, ‘உனக்கு இதை விட நல்ல சேலை வேணும்னா உம் மாமியார்கிட்டதான் போய் கேக்கணும்’ என்று சொல்ல அந்த இடமே சிரிப்பு மயமானது.

நாம் அப்பெண்களை நெருங்கி, ‘என்னம்மா நடக்குது., இங்க?” என்று கேட்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்தனர். ஆனால் அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் 100 நாள் வேலை அட்டைகளும், அருகே வைக்கப்பட்டிருந்த சேலைகளும் அங்கே நடப்பதை தெளிவாக எடுத்துரைத்தன.

அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு கொஞ்ச தூரம் சென்றபோது ஓர் தாத்தா சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

அவரை நிறுத்திப் பேசினோம். ‘எனக்கு பெரும்பாக்கம். அது விக்கிரவாண்டி தொகுதி இல்ல. விழுப்புரம் தொகுதி. என் பொண்ணை விக்கிரவாண்டி தொகுதியிலதான் கட்டிக் கொடுத்திருக்கேன், அதான் பாத்துட்டு வர்றேன்” என்றார் விவரமாய்.

பிரபு

அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள், ‘அண்ணே அவர் இந்தத் தொகுதி இல்ல, விழுப்புரம். நாங்கதான் விக்கிரவாண்டி தொகுதி’ என்று  விளக்கிவிட்டு நம்மிடம் பேசினார்கள்.

பிரபு என்ற இளைஞர், ‘காலேஜ் முடிச்சுட்டு வேலைக்காக ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். இன்னும் எனக்கு வேலை கெடைக்கலை. ஆனா எங்க வீட்டுக்கெல்லாம் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க. போன முறை திமுகவுக்குதான் ஓட்டு போட்டேன். ஆனா இந்த தடவை என்னனு இன்னும் முடிவுபண்ணலை. இங்க எம்,எல்.ஏ.வா இருந்த புகழேந்தி என்ன செய்தார்னு எனக்கு தெரியலை” என்றார்.

அவரோடு வந்த இன்னொரு இளைஞர், “எங்க வீட்ல 5 ஓட்டு… 5 ஆயிரம் ரூபா திமுக கொடுத்தாங்க. நாலு பேர் திமுகவுக்கு போடுவாங்க. ஆனா நான் மட்டும் நாம் தமிழருக்குதான் போடுவேன். சீமான் சொல்ற விசயங்கள் எனக்கு பிடிக்குது” என்றார்.

காசியம்மாள்

சற்று தொலைவில் நாம் சந்தித்த காசியம்மாள், ‘எனக்கு ஓஏபி வருது. ஆனா இதை காரணம் காட்டி என் மருமகளுக்கு அட்டை பணம் தரமாட்டேங்குறாங்க. புள்ளைகளை வச்சிட்டு அது கஷ்டப்படுது. அம்மாவை வச்சி என் மகன் காப்பாத்தறதால அவனுக்கு தண்டனையா? நீயே சொல்லு எனக்கு ஓஏபி கொடுத்தா அந்த புள்ளைக்கு அட்டை பணம் கொடுக்கக் கூடாதா? யாருமே எனக்கு எதுவும் செய்யலை. இப்ப மட்டும் வந்து பணம் கொடுத்துட்டு போறாங்க’ என்று அலுத்துக் கொண்டார். அவர் அட்டைப் பணம் என்று சொன்னது குடும்ப அட்டைக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் கலைஞர் உரிமைத் தொகையைத்தான்.

ஒரத்தூர் பகுதியில் மழைக்கு இடையே நாம் அருந்தியர் சமுதாயப் பெண்களை சந்தித்தோம்.

“நான் பிளஸ்டு படிச்சிருக்கேன் சார்… பாண்டிக்கு ஒரு கம்பெனியில வேலைக்கு போயிட்டிருந்தேன். ஒம்பதாயிரம் சம்பளம் கொடுத்தாங்க. புள்ளைகளை பாத்துக்க முடியலைனு வேலைக்கு போகல. இப்ப வந்து பிரச்சாரத்துக்கு வா-னு எல்லாரையும் கூட்டிட்டுப் போறாங்க. அதுக்கு  கூட எங்க மக்களை கூப்புடறதில்லை. அதெல்லாம் வேணாம் சார்… ஒரு வேலை கொடுத்தா போதும்” என்றார்.

பூபதி

அருகே நின்ற அவரது பெரிய மாமியார் பூபதி, “எங்க வீட்டுக்காரரு இல்ல. எனக்கு வீடு கட்டித் தர்றதா கட்சிக்காரங்க எல்லாம் சொன்னாங்க. ஆனா இப்ப வரைக்கும் எட்டிப் பாக்குறதில்லை. நானே ரெண்டு லட்சம் கடன் வாங்கி என்னென்னமோ பண்ணி இந்த வீட்டை கட்டியிருக்கேன். நாங்கள்லாம் செருப்பு தைக்கிறவங்க. பணம் கொடுத்தா வாங்கிக்குவோம். இல்லைனு சொல்ல மாட்டோம். ஆனா எதுக்காக பணம் கொடுக்குறே? எங்களுக்கு வேலை ஆவணும்னு பணம் கொடுக்குறியா? இல்லையே…உனக்கு உதவி செய்யணும்தானே பணம் கொடுக்குறே?” என்று கூர்மையாகக் கேட்டார் பூபதி.

இப்படி நாம் விக்கிரவாண்டி தொகுதி முழுதும் சந்தித்த பலரும், ‘ஆமா பணம் கொடுக்குறாங்க. வாங்கிக்கிறோம். ஆனா எங்க மனசுக்கு எங்க சிந்தனைக்குதான் ஓட்டு போடுவோம். எங்களுக்கு கொடுக்குறது  யாரு காசு? “ என்று வெளிப்படையாகவே கேட்கிறார்கள்.

வேந்தன், வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை ரிச்சி தெருவில் யூடியூபருக்கு கொலை மிரட்டல்… மூவர் கைது!

’விழுப்புரத்தில் 3.49 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை’ : ஸ்டாலின்

+1
0
+1
1
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *