விக்கிரவாண்டி இடைத்தேர்தலும், தமிழ்நாட்டு அரசியல் வரலாறும்!

Published On:

| By Minnambalam

Political history of Tamil Nadu

ராஜன் குறை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க எதிர்த்து நின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை விட இரு மடங்கு வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த அதிக அளவிலான வாக்கு வித்தியாசமே இந்த தேர்தல் முடிவினைக் குறித்து சிந்திக்க வைக்கிறது. Political history of Tamil Nadu

ஓர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது புதிதல்ல. பொதுவாகவே வாக்காளர்களில் பலரும் தாங்கள் செலுத்தும் வாக்கு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் வெல்லும் கட்சிக்கு ஓட்டுப்போட விரும்புவார்கள். இந்த உளவியலை முன்னிட்டுத்தான் பல கட்ட தேர்தல்களில் ஒரு பகுதியின் எக்ஸிட் தேர்தல் கணிப்புகளை பிற இடங்களில் தேர்தல் நடப்பதற்கு முன் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த உளவியலை கணக்கில் கொண்டால் ஏற்கனவே ஆளும்கட்சிக்கு வாக்களித்தால் தங்கள் வாக்கு தேர்ந்தெடுக்கும் பிரதிநிதியும் ஆட்சியின் பகுதியாக இருப்பார் என்று கணிசமான வாக்காளர்கள் கருத வாய்ப்புள்ளது. பெரிய அளவில் ஆட்சியின் மீது அதிருப்தி இல்லையென்றால் ஆளும்கட்சி நிச்சயம் இடைத்தேர்தலில் வெற்றி பெறும். அதே சமயம் இதை மாறாத விதியாகக் கருத முடியாது.

உதாரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் உத்தராகண்ட் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் ஆளும் பாஜக வெல்லாமல் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வென்றவர், பாஜக கட்சிக்கு தாவிவிட்டதால் இடைத்தேர்தல் நடந்துள்ளது. அவரே பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார். ஆனால், மக்கள் அவரைத் தேர்ந்தெடுக்காமல், மீண்டும் காங்கிரஸுக்கே வாக்களித்துள்ளனர். அதாவது செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளும்கட்சிக்குத் தாவி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி சார்பாக நிற்கிறார். ஆனால், மீண்டும் எதிர்க்கட்சிதான் வெல்கிறது.

தமிழ்நாட்டில் அதுபோன்ற நிலைக்கு வாய்ப்பேயில்லை. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தன் செயல்பாடுகளால் மக்களின் பேராதரவைத் தொடர்ந்து பெற்று வருகிறது. அதே போல அவர் தலைமையிலான கூட்டணி வலுவாகவும், கருத்தொப்புமையுடனும் தொடர்கிறது. அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மீண்டும் தி.மு.க வேட்பாளரே வெற்றி பெறுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஆனால், இந்தத் தேர்தலுக்கு சுவாரஸ்யம் கூட்டியது என்னவென்றால் அ.இ.அ.தி.மு.க தேர்தலில் போட்டியிடாமல் விலகியதுதான். அது தி.மு.க-வை எதிர்த்துப் போட்டியிடும் முக்கிய வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை மாற்றியது. நாம் தமிழர் கட்சி களத்தில் இருந்தாலும் அது வெற்றி தோல்வியை பாதிக்காது என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.

இந்த நிலையில் ஒரு முக்கிய கேள்வி என்னவாக இருந்தது என்றால் அ.இ.அ.தி.மு.க போட்டியிடாததால் அந்தக் கட்சியின் ஆதரவு வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என்பதுதான். ஒன்று, அ.இ.அ.தி.மு.க ஆதரவு வாக்காளர்கள் வாக்களிக்காமலேயே இருந்து விடலாம். அப்படியானால் வாக்குப் பதிவு எண்ணிக்கை குறைய வேண்டும். இரண்டு, தி.மு.க எதிர்ப்பே அ.இ.அ.தி.மு.க என்று கருத்தில்கொண்டால் அ.இ.அ.தி.மு.க வாக்குகள் பாமக-வுக்கே சேகரமாகி 2021-இல் அந்தக் கட்சிகள் சேர்ந்து பெற்ற அதே வாக்குகளைப் பெற வேண்டும். இல்லை, அ.இ.அ.தி.மு.க வாக்குகள் தி.மு.க எதிர்ப்பில் சிதறும் என்றால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வேண்டும். ஆனால், நடந்திருப்பது மூன்றாவது சாத்தியம். அது அ.இ.அ.தி.மு.க ஆதரவு வாக்குகள் தி.மு.க-வுக்கு நகர்ந்துவிடும் என்பதுதான். சென்ற சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்த அட்டவணையைப் பரிசீலிப்போம்.

மொத்த வாக்கு எண்ணிக்கையில் பெரிய மாற்றமில்லை. 4,000 வாக்குகள் அதிகமாகியுள்ளன. நாம் தமிழர் வாக்குகளில் அதிக வித்தியாசமில்லை. 2,000 வாக்குகள் அதிகமாகியுள்ளன. ஆனால், இரண்டாம் இடத்திலிருந்த தி.மு.க எதிர்ப்பு வாக்குகளிலிருந்து 27,000 வாக்குகள் தி.மு.க-வுக்கு நகர்ந்துள்ளன என்று தெரிகிறது. இந்த வாக்குகள் பெரும்பாலும் அ.இ.அ.தி.மு.க ஆதரவு வாக்குகள்தான் என்று கருதாமல் இருக்க முடியாது. இது தமிழ்நாட்டு அரசியல் குறித்து சற்றே ஆழமாக சிந்திக்கும் வாய்ப்பினை உருவாக்குகிறது.
 
இன்றைய நிலையில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு தளம் சுருங்கினால் அது தி.மு.க ஆதரவு தளத்தின் விரிவாக்கமாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு என்ற சாத்தியத்தை விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாகக் கூறலாம். கடந்த ஆறாண்டுகளாக, ஜெயலலிதா மறைந்ததில் இருந்து, அ.இ.அ.தி.மு.க பலவீனமடைந்தால் அந்த இடத்தில் பாஜக உள்ளே புகுந்துவிடும் என்ற வாதம் வைக்கப்பட்டு வருகிறது. பாஜக கட்சியினரே அவ்வாறு நம்பி, அ.இ.அ.தி.மு.க-வை பிளக்க, பலவீனப்படுத்த ஒன்றிய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு முயற்சிகளைச் செய்தனர்.
 
தமிழ்நாட்டு அரசியலின் தனித்துவம், இரண்டு திராவிடக் கட்சிகள்தான் ஒன்றை மாற்றி ஒன்று ஆட்சி செய்யும் என்ற நிலை மாறிவிடக் கூடாது, இங்கே நேரடியாக பாஜக போன்ற மதவாதக் கட்சி காலூன்றக் கூடாது என்று நினைப்பவர்கள் எப்படியாவது அ.இ.அ.தி.மு.க வலுவுடன் இருப்பது அவசியம் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் தி.மு.க ஆதரவாளர்களாகவே இருந்தாலும் அ.இ.அ.தி.மு.க உட்கட்சி பூசலை அதிக கரிசனத்துடன் கவனித்து வந்தார்கள். அந்தக் கட்சி வலுவான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதில் தவறில்லை.
 
ஆனால், இன்று புலனாகும் மற்றொரு சாத்தியம் என்னவென்றால் அப்படி அ.இ.அ.தி.மு.க வலுவிழந்தாலும் அதன் வாக்குகள் பாஜக-வுக்குச் செல்லாமல், தி.மு.க-வுக்கே திரும்பலாம் என்பதுதான். ஓர் இடைத்தேர்தல் முடிவைக் கொண்டு இதை பொதுமைப்படுத்திச்  சொல்ல முடியாது என்றாலும், மிகத் தெளிவான ஒரு சாத்தியம் புலனாகியிருப்பதாகச் சொல்ல முடியும். இந்தக் கட்டுரையின் நோக்கம், அந்தச் சாத்தியத்தை வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து புரிந்துகொள்வதுதான்.
 
 
திராவிட – தமிழர் என்ற மக்கள் தொகுதியும், அரசியல் முரண்கள வடிவமைப்பும்
 
தி.மு.க தொடங்கியது முதல் ஆட்சிக்கு வந்தது வரையிலான பதினெட்டு ஆண்டுகளில் அது மக்களை எப்படி அணி திரட்டியது என்பதை கோட்பாட்டாக்கம் செய்து Rule of the Commoner: DMK and the Formations of the Political, 1949-1967 என்ற நூல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானது. நானும், நண்பர்கள் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், சுபகுணராஜன் ஆகியோரும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த நூலை எழுதியிருந்தோம்.
 
தி.மு.க-வின் அரசியல் அணி திரட்டலின் விளைவு இரண்டு பரிமாணங்களைக் கொண்டது என்று அந்த நூலில் கூறியிருந்தோம். ஒன்று திராவிட – தமிழர் என்ற மக்கள் தொகுதியை அது கட்டமைத்தது. கட்டமைப்பது என்றால் என்னவென்றால் மக்களை அவ்விதமாக தன்னுணர்வு பெறச் செய்வது. இந்தத் தன்னுணர்வு என்பது யாரோ ஒருவர் தான் மட்டும் திராவிட – தமிழர் என்று எண்ணுவதல்ல. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் திராவிட – தமிழர் என்று ஒருவர் எண்ணுவதாகும். அதாவது ஒரு சமூக முழுமையை திராவிட – தமிழர் அடையாளம் குறிப்பதாக உணர்வதாகும்.
 
இவ்வாறு மக்கள் தொகுதியைக் கட்டமைக்கும்போது தி.மு.க அந்தத் தொகுதிக்கு வெளியேயுள்ள மற்றோர் அடையாளத்தை எதிரியாகக் காட்டி கட்டமைக்கவில்லை. ஆரியர்கள் என்று கருதிக்கொண்ட பார்ப்பனர்களையோ, வட நாட்டவரையோ வெளியே நிறுத்தி அவர்களை எதிர்க்கும் அடையாளமாக திராவிட – தமிழர் அடையாளத்தைக் கட்டமைக்கவில்லை. மாறாக திராவிட – தமிழர் என்பதை ஒரு கருத்தியல் சார்ந்த அடையாளமாகக் கருதியது. சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், கூட்டாட்சி ஆகியவற்றை கருத்தியலின் அச்சாக்கி அந்தக் கருத்தியலை வெவ்வேறு அளவில் ஏற்பவர்களுக்கும், ஏற்காதவர்களுக்குமான முரண்களமாகவே திராவிட – தமிழர் என்ற சமூக முழுமையைக் கட்டமைத்தது.
 
உதாரணமாக, காங்கிரஸ் கட்சியில் இருந்த பார்ப்பனரல்லாத தமிழர்களை காங்கிரஸ் – திராவிடர்கள் என்று அழைத்தது தி.மு.க. மற்றொரு புறத்தில் தங்கள் கருத்தியலை ஏற்கும் பார்ப்பனர்களையும் கட்சியில் இணைத்துக்கொள்ள முன்வந்தது. உதாரணமாக வழக்கறிஞர் வி.பி.ராமன் தி.மு.க செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். கட்சியின் சட்டத் திட்டங்களை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றார். இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாராயண் சிங் என்ற இயற்பெயர் கொண்ட ராஜஸ்தான் வம்சாவழியினரான உடுமலை பா.நாராயணன் கோவை மாவட்டச் செயலாளராக இருந்ததோடு, மக்களவை உறுப்பினராகவும் விளங்கினார்.
 
இதன் பொருள் என்னவென்றால் காங்கிரஸ்காரர்கள் ஆனாலும், பார்ப்பனர்கள் ஆனாலும், தமிழரல்லாத வட இந்திய வம்சாவழியைக் கொண்டிருந்தாலும் கருத்தியல் அடிப்படையில் திராவிட – தமிழர் அடையாளத்தில், அதன் அரசியலில் பங்கு பெறலாம் என்பதுதான். அப்படி பங்கு பெறாமல் தி.மு.க-வை எதிர்ப்பவர்களும் திராவிட – தமிழர் என்ற சமூக முழுமையான அரசியல் முரண்களத்தில் தி.மு.க-வுடன் மோதுபவர்கள்தான். இன்னும் தெளிவாகச் சொன்னால் சமூக – முழுமை என்பது ஒருபடித்தானதல்ல. தனக்குள் முரண்கள் கொண்டது. நண்பர்களாகவும், எதிரிகளாகவும் அணி சேரும் முரண்களம். ஆனால், அந்த ஒட்டுமொத்த முரண்களமும் திராவிட – தமிழர் அடையாளம் கொண்டதுதான். அனைவருமே திராவிட கருத்தியலின் விளிப்பிற்கு உட்பட்டவர்கள்தான்.
 
தி.மு.க 1971 தேர்தலில் இந்திரா காங்கிரஸ், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 53% வாக்குகளைப் பெற்றது. எதிர்த்து நின்ற காமராஜ் காங்கிரஸ், சுதந்திரா கட்சிகளின் கூட்டணி  38% வாக்குகளைப் பெற்றது. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபோது தி.மு.க ஆதரவு ஓட்டுகள் இரண்டாகப் பிரிந்து மீண்டும் காங்கிரஸ் வெற்றிக்கு வழிவகுக்கும் என கருதப்பட்டது. ஆனால் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்பதே திராவிட – தமிழர் சமூகமென்ற முரண்களத்தின் வடிவமாக மாறியது. காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் இடம் மிகவும் சுருங்கியது. எனவே, காலப்போக்கில் அனைத்து கட்சிகளும் தி.மு.க தலைமையிலான கூட்டணியிலோ, அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலோ இடம்பெறுவது என்பது வழக்கமாயிற்று. இதன் விளைவாக திராவிடர் – தமிழர் சமூக முழுமையென்பதும், அதுவே அரசியல் முரண்களத்தின் வடிவம் என்பதும் உறுதிப்பட்டது.
 
 
திராவிட – தமிழர் சமூக முழுமையை மறுதலிக்கும் பாஜக Political history of Tamil Nadu
 
பாரதீய ஜனதா கட்சி கருத்தியல் ரீதியாக திராவிட – தமிழர் என்ற சமூக முழுமையை மறுக்கும் கட்சி. தமிழ்மொழியை ஏற்றுக்கொண்டாலும், அது ஒருபோதும் தனித்துவமிக்க திராவிட பண்பாட்டு அடையாளத்தை ஏற்காது. இந்தியா முழுமையும் சமஸ்கிருத ஆரியப் பண்பாட்டினால் வடிவமைக்கப்பட்டது, அதுவே இந்து அடையாளம், இந்துத்துவம் என்பதே அதன் கோட்பாடு.
 
ஆனாலும்கூட பாஜக இந்திய அரசியலில் தலையெடுத்தபோது, தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் ஒரு சில தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு கூட்டணி அமைக்கத் தயங்கவில்லை. ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தபோது திராவிட கட்சிகள் பங்கேற்புடன் அமைத்தது. கொள்கை முரணை ஒதுக்கிவிட்டு தேர்தல் அரசியல் கணக்கில் செயல்பட்டது.
 
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதற்கு அ.இ.அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தி அந்த இடத்தில் காலூன்றி விடலாம் என்ற எண்ணம் வந்துள்ளது. எனவே, எழுபத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றில் உருவாகிவிட்ட திராவிட – தமிழர் என்ற சமூக முழுமை சித்தரிப்பை அது முற்றிலும் மறுக்க முயற்சி செய்கிறது. திராவிடம் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று ஆளுநர் ரவி கூறுகிறார். திராவிட கட்சிகளை அப்புறப்படுத்துவோம் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டின் முரண்கள வடிவமைப்பை பாஜக மாற்ற முயற்சி செய்கிறது. Political history of Tamil Nadu
 
ஆனால், திராவிட – தமிழர் என்பது ஒரே நேரத்தில் சமூக முழுமையின், ஒட்டுமொத்த மக்கள் தொகுதியின் அடையாளமாகவும் அதேசமயம் அரசியல் முரண்களமாகவும் இருப்பதால் பாஜகவால் தமிழ்நாட்டின் அரசியல் முரண்கள வடிவமைப்பை மாற்ற முடியாது. அது அ.இ.அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தினால் அந்தக் கட்சியின் வாக்குகள் முரண்கள வடிவமைப்பின் எல்லைக்குள் உள்ள தி.மு.க-வுக்குத்தான் செல்லுமே தவிர, அந்த வடிவமைப்பை வெளியே இருந்து தகர்க்க நினைக்கும் பாஜக-வுக்குச் செல்லாது.
பாட்டாளி மக்கள் கட்சி போன்ற ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி, அதன் எல்லைக்குட்பட்ட வாக்குகளை ஈர்க்கும் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டுமானால் அது நிறுவப்பட்ட அரசியல் முரண்கள எல்லைக்குள் செயல்பட வேண்டுமே தவிர, அதைத் தகர்க்க நினைக்கும் பாஜக-வுடன் இணைவது பலன் தராது. தெரிந்தோ, தெரியாமலோ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததன் மூலம் அ.இ.அ.தி.மு.க பாமக-வுக்கு அந்தச் செய்தியை சொல்லிவிட்டது. பாஜகவுக்கும் அதன் எல்லைகளைத் தெளிவுபடுத்திவிட்டது.
 
தொலைக்காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் பலர் அ.இ.அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் தி.மு.க-வின் அங்கமாக இருந்தவர் என்பதைக் குறிப்பிட்டார்கள். அதைவிட முக்கியம் தி.மு.க-வை தோற்றுவித்த அண்ணாவின் பெயரில்தான் அந்த கட்சி இயங்குகிறது என்பது. அதற்காக அ.இ.அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் ஒன்று அல்ல. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வேர்மட்ட த்திலிருந்து, தலைமை வரை கடுமையான முரண்கள் உண்டு, வித்தியாசங்கள் உண்டு, வேறுபாடுகள் உண்டு. இரண்டு கட்சிகளும் சமரசமற்ற அரசியல் எதிரிகள். ஆனால், இரண்டு கட்சிகளும் மோதும் களம் திராவிட – தமிழர் என்ற சமூக முழுமையான முரண்களம்தான். அந்தக் களத்தையே மறுக்கும் பாஜக, அ.இ.அ.தி.மு.க வாக்குகளைக் களவாட முடியாது என்றே தோன்றுகிறது.  மோடி அலை சுனாமியாக வீசியபோது தமிழ்நாட்டின் கரையை உடைத்துப் புக முடியவில்லை. இப்போது அந்த அலையே வலுவிழந்துவிட்டது. விக்கிரவாண்டி தரும் வானிலை அறிக்கை முக்கியமானது.

கட்டுரையாளர் குறிப்பு:

Vikravandi by-election and Political history of Tamil Nadu by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பகுத்தறிவும், மக்களாட்சியும்: ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் கூறுவது என்ன?

நீட் தேர்வும் இந்திய மக்களாட்சியும்

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டுப் பொங்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி ஏன் முக்கியமானது? : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

INDvsZIM : தடுமாறிய ஜிம்பாவே… தொடரை கைப்பற்றியது இந்தியா!

இந்தியன் தாத்தாவால் கூட பேச முடியாத ஊழல் : அப்டேட் குமாரு

Political history of Tamil Nadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel