அதிமுக புறக்கணிப்பு…கடும் போட்டியை சந்திக்கும் திமுக

Published On:

| By Selvam

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு திமுகவிற்கு கடும் சவாலை உருவாக்கியுள்ளது.

இந்த முடிவை அதிமுக ஏன் எடுத்தது என்பதையும், அதிமுக போட்டியிடவில்லை என்றால் திமுகவிற்கு சாதகம் தானே, இது எப்படி சவாலாக மாறும் என்பதையும் பார்ப்போம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.

ஆலோசனையின் போது, ”இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து ஓட்டுக்கு 1000, 2000 என்று பணத்தை இறக்குவார்கள். நம் தரப்பிலிருந்து 500 ரூபாயாவது கொடுத்தால் தான் நம்மால் குறைந்தபட்சம் போட்டியைக் கொடுக்க முடியும். ஏற்கனவே 40 தொகுதிகளிலும் தோற்றது கட்சியின் மீதான பார்வையை மாற்றியுள்ளது. இந்த நேரத்தில் நாம் எதற்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்று நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் நிர்வாகிகள் யாரும் செலவு செய்யவும் தயாராக இல்லை. ஒருவேளை தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குப் போய்விட்டால் அது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் பல சிக்கல்களை உருவாக்கிவிடும். மேலும் பாமக இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டால், 2026 இல் பாமக கூட்டணி பேசும்போது, நம்மை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டோம் என்பதை சொல்லியே அதிக சீட்டுகளை டிமாண்ட் செய்வார்கள். எனவே நாம் தேர்தலை புறக்கணிப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளனர். எனவே பல்வேறு வழிகளில் கூட்டிக் கழித்துப் பார்த்து தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக தரப்பு அறிவித்துள்ளது.

அதிமுக தேர்தலைப் புறக்கணிக்கிறது எனும் போது இன்னொரு கேள்வி எழுகிறது. அதிமுகவின் வாக்குகள் எங்கே போகும் என்பதே அந்த கேள்வி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 72,188 வாக்குகளைப் பெற்றது.

அதிமுக 65,365 வாக்குகளைப் பெற்றது. பாமக 32,198 வாக்குகளைப் பெற்றது. அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையில் குறைவான வாக்கு வித்தியாசமே இருக்கிறது. இருந்தாலும் இடைத்தேர்தல் களம் வேறாக இருக்கும் என்பதால் அதிமுக போட்டியிட விரும்பவில்லை. இப்போது அதிமுக வாக்குகளை எடுத்துக் கொண்டோம் என்றால் அவை அனைத்தும் திமுக எதிர்ப்பு வாக்குகள் என்பதால், அவை பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கே அதிகம் போக வாய்ப்பு இருக்கிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என்று மூன்றாகப் பிரிந்த திமுக எதிர்ப்பு வாக்குகள் இப்போது பாமக மற்றும் நாம் தமிழர் என்று இரண்டாக மட்டுமே பிரிகிறது. எனவே திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிவது இந்த இடைத்தேர்தலில் குறைகிறது.

அதிமுக களத்திலிருந்து ஒதுங்கியதன் மூலம் திமுகவிற்கு கடுமையான போட்டி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உருவாகியுள்ளது. எனவே திமுக இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel