வைஃபை ஆன் செய்ததும் விஜய் புதிய கட்சி பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து குவியத் தொடங்கின.’
அவற்றைப் பார்த்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“நடிகர் விஜய், ‘ தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி விண்ணப்பித்திருக்கிறார். டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பம் அளித்த சில நிமிடங்களில் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் இருந்தும் தென் மாநிலங்களில் இருந்தும் விஜய்யை பலர் வாழ்த்த தொடர்புகொண்டபோதும் அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம் ட்விட்டரில் அறிவிப்பு வந்தபோது விஜய் சென்னையை அடுத்த ஒரகடத்தில் தனது ‘கோட் ‘படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்.
விஜய்யின் அரசியல் பிரவேச அறிவிப்பு பற்றி ஊடகங்கள் எங்கும் விவாதம் எழுந்துகொண்டிருக்கின்றன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் யாரை பாதிப்பார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படலாம். அப்போது திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அதிமுகவுக்கு ஒருபக்கம், நாம் தமிழருக்கு ஒரு பக்கம், பாஜகவுக்கு ஒரு பக்கம், விஜய்க்கு ஒரு பக்கம் என்று சிதறினால் மீண்டும் திமுக அரசே வரலாம் என்ற விவாதம் ஒரு பக்கம் எழுகிறது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் விஜய் கூட்டணி முடிவை எடுத்துவிட்டால் திமுகவுக்கே அதிக சேதாரம் என்றும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது.’ இதெல்லாம் விஜய் அவரது கொள்கைகள், அரசியல் செயல் திட்டங்களை முன் வைத்த பிறகுதான் உறுதியாகும்.
விஜய் புதிய கட்சியை அறிவித்த சில மணி நேரங்களில் ஸ்பெயினில் இருக்கும் முதல்வருக்கு இதுகுறித்து சீக்ரெட் ரிப்போர்ட்டும் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதுபற்றி விசாரித்ததில், ‘விஜய் தனது அறிக்கையில் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுக்கு எதிராகவும், ஜாதி மதவாத பிளவுவாதத்துக்கு எதிராகவும் நிற்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால் அவருக்கு சில நிர்பந்தங்கள் இருக்கின்றன. அதனால்தான், தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்த உடனேயே அறிவிப்பு வெளியிட்டுவிட்டார். முன்னறிவிப்பு கொடுத்து விழா ஏற்பாடு செய்து, மக்களைத் திரட்டி அப்போது கட்சி பெயரை அறிவிப்பதாகத்தான் விஜய் திட்டமிட்டார். ஆனால் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் ஒரே ஒரு அறிக்கை மூலம் இதை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று கூறலாம் என ஆளுநர் ரவி கூறினார். அப்போது அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தமிழ்நாடு என்ற பெயரைத் தவிர்த்துவிட்டு தமிழகம் என்ற பெயரை தனது புதிய கட்சிக்கு வைத்துள்ளார். இதற்கு அவரது நியூமராலஜி நம்பிக்கை என்று விஜய் தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.
மேலும் விஜய் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு வெற்றி என்று பொருள். எனவே அவரது பெயரில்தான் கட்சி தொடங்கியுள்ளார். விஜய்யின் புதிய கட்சியால் திமுக, அதிமுக வாக்குகள் கணிசமாக பிரிய வாய்ப்பிருக்கிறது. திமுகவில் வாய்ப்பு கிடைக்காத அல்லது ஓரங்கட்டப்பட்டவர்கள் விஜய் பக்கமாக தங்களது அரசியல் பயணத்தை திருப்பவும் வாய்ப்பிருக்கிறது’ என்று அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்று நேற்று நாளை 2 என்ன ஆச்சு? விஷ்ணு விஷால் பதில்!
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து!