மின்னம்பலம் செய்தியில் நேற்று தெரிவித்தபடி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி இன்று, பிப்ரவரி 24ஆம் தேதி டெல்லியில் பாஜக அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த இரண்டு வார காலங்களாக அவர் தொகுதிக்கு வராமல், சட்டமன்றத்துக்கும் வராமல், புதிய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற செல்வபெருந்தகையின் பதவியேற்பு விழாவிற்கும் வராமல் டெல்லியிலேயே இருந்தார்.
மின்னம்பலம் சார்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த உறுதியான பதிலையும் அவர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தான் இன்று அவர் பாஜகவில் இணைந்திருக்கிறார். இதன் அடுத்த கட்டமாக விஜய தரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் தனது விருப்பத்திற்கு ஏற்றபடி தன்னிச்சையாக கட்சி மாறுவதை கட்சி தாவல் தடை சட்டம் கட்டுப்படுத்துகிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் 10 வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவர் தனது உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார்.
நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் சார்ந்திருக்கும் கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக நாடாளுமன்ற, சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ, அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ பதவி இழப்பார்.
இந்த நிலையில் விஜயதரணி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார். இதையடுத்து விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
தமிழர் உரிமை மீட்போம்: மக்களவை தேர்தல் பரப்புரையை துவங்கிய அதிமுக