சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது கொடுத்த புகாரினை இரவோடு இரவாக விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நடிகை விஜயலட்சுமி முன்வைத்தார். இதுகுறித்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சீமான் மீது கொடுத்த புகார்களை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார்.
இதற்காக நேற்று இரவு 12 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த அவர், சீமான் மீதான அனைத்து புகார்களையும் எழுத்துப்பூர்வாக மனு கொடுத்து திரும்பப் பெற்றுக்கொண்டார்.
வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயலட்சுமி, “போலீஸ் புகார் அளித்த பிறகு போலீசாரின் உரியப் பாதுகாப்புடன் தான் நான் தங்கி இருந்தேன். வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தான் தங்கி இருந்தேன். அனைத்தும் நன்றாகச் சென்று கொண்டு இருந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக அவர் ஒரு ரூட்டில் செல்கிறார். என்னையும் வேறு ஒரு ரூட்டில் தள்ளப் பார்க்கிறார்.
இதன் காரணமாகவே எதுவாக இருந்தாலும் என்னைக் கேட்டுவிட்டுப் பேசும்படி கூறியிருந்தேன். வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தங்கியிருந்த நிலையில், நேற்றிரவே என்னை அங்கிருந்து வெளியே செல்லும்படி சொன்னார்கள்.
அப்போது இரவு நேரம் என்பதால் அங்கே இருக்க போலீஸ் தான் பேசினார்கள். நகரில் இருந்து வெளியே தங்கியிருந்தேன். காலையில் உணவு கூட கிடைக்கவில்லை. போலீஸ் தான் வாங்கிக் கொடுத்தார்கள்.
யாரும் கட்டாயபடுத்தவில்லை!
இப்படி வெளியே சொல்ல முடியாத துன்புறுத்தல்களை நான் எதிர்கொண்டேன். இதன் காரணமாகவே நான் புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்தேன்.
நான் இப்போது பெங்களூர் கிளம்புகிறேன். வழக்கை வாபஸ் பெற யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. தனி ஒருவராக போராட முடியவில்லை .
சீமானிடமும் கூட இது குறித்து நான் பேசிவிட்டேன். அவரை எதிர்க்க தமிழ்நாட்டில் ஆள் இல்லை. இந்த பிரச்சனையில் அவரே வென்றார். நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். தற்போது புகாரை வாபஸ் பெற்றுள்ளேன். மீண்டும் இந்த புகாரை முன்னெடுக்க விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசியலில் சீமானுக்கு எதிரான பெரும் ஆயுதமாக விஜயலட்சுமி விவகாரம் தொடர்ந்து எழுந்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கலப்பு பருப்பு வடை