ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் இணைந்து மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்தும் மூதாட்டிக்கு தண்ணீர் தூக்கி கொடுத்தும் நூதன முறையில் வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் செய்ய இன்னும் ஏழு தினங்களே எஞ்சி உள்ளதால் களத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சியினர் அனல் பறக்க பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மணல்மேடு பகுதியிலிருந்து சூரம்பட்டி நான்கு ரோடு பகுதி வரை தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக
வேட்பாளருடன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் இணைந்து மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக நடந்து சென்று கொட்டுமுரசு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
மேலும் இந்த வாக்கு சேகரிப்பில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் விஜயகாந்தின் புகைப்படம் உள்ள முக மூடியை அணிந்து வலம் வந்தனர்.
இந்நிலையில் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரன் ஆகியோர் இணைந்து மீன் விற்பனை செய்து நூதன முறையில் கொட்டுமுரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது மீனை வைத்துக் கொடுக்க கடை உரிமையாளர் கேரிப்பையை கொடுத்த நிலையில் பிளாஸ்டிக் பை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அதனால் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
பின்னர் தொடர்ச்சியாக வாக்கு சேகரித்து வந்த இருவரும் அப்பகுதியில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு தண்ணீர் பிடித்துக் கொடுத்தும் வாக்காளர்களை கவர்ந்தனர்.
மேலும் விஜய பிரபாகரன் விஜயகாந்த் உங்களின் சொத்து அவர் வந்தால் தங்கத்தட்டில் வைத்து மக்களை பார்த்துக்கொள்வேன் என்று கூறினார், நீங்கள் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும், விரைவில் அவர் நலமுடன் எழுந்து வந்து உங்களை சந்திப்பார் என்று உருக்கமாக பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ்,
தேமுதிக வேட்பாளர் இதே பகுதியைச் சேர்ந்தவர், இப்பகுதியில் உள்ள மக்களுக்கு இருக்கும் பிரச்சனை இவருக்கும் உள்ளது. அதனால் நல்ல முறையில் செயல்படுவார்.
ஆனால் எதிர் தரப்பில் உள்ள வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் இருக்கிறார். வெற்றி பெற்றால் அவரால் வர முடியாது. என்னை பொறுத்தவரை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார்.
அதனால் இந்த பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்வார். அதனால் மீண்டும் இங்கு ஒரு இடைத்தேர்தல் வரும். அதற்கு வாய்ப்பு தர வேண்டாம்.
அதனால் முரசு சின்னத்திற்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும், 18 ஆண்டுகளில் 50 இடைத்தேர்தலை நாங்கள் பார்த்துள்ளோம் இது மாதிரி ஒரு மோசமான இடைத்தேர்தலை சந்தித்தது கிடையாது.
தேமுதிகவினரிடம் திமுகவினர் பிரச்சனை செய்தனர். நேற்று நாம் தமிழர் கட்சியினரிடம் பிரச்சினை செய்துள்ளனர்.
ஆனால் இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை இருக்கின்ற மொத்த அமைச்சர்கள் இங்கேதான் இருக்கின்றனர்.
அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் அரசு அதிகாரிகளும் இங்கே தான் இருக்கின்றனர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இப்பகுதியில் மின்சாரத் துறையில் ஒரு இடமாற்றம் செய்ய 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
ஆனால் இடைத்தேர்தல் அறிவித்ததற்கு பிறகு அதே இடமாற்றத்தை கேட்ட நபருக்கு இலவசமாக செய்து கொடுத்துள்ளனர். அப்போ ஒரு ஓட்டுக்கு 5 லட்சம் ரூபாயா? என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சரை எடப்பாடி பழனிச்சாமி எப்படி விமர்சனம் செய்தார் என்று தெரியவில்லை. அப்படி வேட்டி கட்டிய ஆண் மகனா? மீசை வைத்த ஆண் மகனா? என பேசி இருந்தால் அது தவறுதான் என்றும் சுதீஷ் கூறினார்.
கலை.ரா
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
100 நாட்கள்…14000 வழக்குகளில் தீர்ப்பு…டி.ஒய்.சந்திரசூட்டின் சாதனை…