அனைத்து சலுகைகளும் பெற ஆதார் எண் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜனவரி 8) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு, மக்கள் ஐடி என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்ற பெயரில் 12 இலக்க எண்
வழங்கப்படவிருப்பதும், அனைத்து சேவைகளையும் இதன் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் மக்கள் ஐடி மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், ஏற்கனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார். எண் பயன்படுத்தி வரும் நிலையில், மக்கள் ஐடி திட்டம் எதற்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/makkal-id2.jpg)
இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா? எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு தமிழக மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சென்னையில் அதிகாலையில் களைகட்டிய மாரத்தான்!
அடுத்த மூன்று மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?