வைஃபை ஆன் செய்ததும் விஜயகாந்த் மறைவு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தேமுதிக நிறுவனத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று (டிசம்பர் 28) காலை காலமாகிவிட்டது தமிழகம் முழுக்க சோக அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
காலை 6.10க்கு மியாட் மருத்துவமனையில் விஜயகாந்தின் உயிர் பிரிந்த செய்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டதுமே அவர் வருத்தம் அடைந்தார். அதன் பிறகு விஜயகாந்துக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்தது. விஜயகாந்தின் உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்ததுமே, முதலமைச்சர் ஸ்டாலின் சாலிகிராமத்துக்கு சென்று விஜயகாந்த் வீட்டில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போதே அரசுத் தரப்பில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம், ‘கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டு வருவாங்க. என்ன ஏற்பாடு பண்ணலாம்? ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்டு, பச்சையப்பாஸ் மைதானம், தீவுத் திடல் இதுபோன்ற பொது இடங்களில் வைக்கலாமா ’ என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். ஆனால் பிரேமலதாவோ, ‘இல்லைங்க… அவரோட ஆசை கட்சி ஆபீஸ்லயே படுக்க வைச்சி அங்கயே அஞ்சலி செலுத்த வைச்சி அங்கேயே அடக்கம் பண்ணனும்னுதான்…’ என்று சொல்லியிருக்கிறார். அதையடுத்து அரசுத் தரப்பில் வேறு ஏதும் அழுத்தம் கொடுக்கவில்லை.
பிற்பகல் 2 மணிக்கு கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கே ஏற்கனவே காலையில் இருந்தே காத்திருந்த தொண்டர்களும் ரசிகர்களும் மக்களும் விஜயகாந்தின் முகத்தை கடைசியாக ஒரு முறை காண முண்டியடித்தனர். திரையுலக விஐபிகள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் என குவிந்ததால் கோயம்பேடே குலுங்கியது. நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. காவல்துறைக்கு பதற்றமானது.
இந்த நிலையில் அஞ்சலி செலுத்த வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, ‘தமிழகத்தின் எல்லா பகுதிகளில் இருந்தும் வரக் கூடிய தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் விஜயகாந்தின் உடலை வைக்க வேண்டும். நாளை பெரிய அளவில் கூட்டம் வர இருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தவறாகிவிடும். எனவே முதலமைச்சர் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேட்டி கொடுத்தார்.
இதனால் விஷயம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பானது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரும் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு சென்று பார்வையிட்டார். மீண்டும் விஜயகாந்த் குடும்பத்தினரிடம் பேசிய தமிழக காவல்துறையினர், ‘காலையிலேயே முதல்வரும் கேட்டார். நாங்களும் உங்களிடம் கேட்டோம். நீங்கள் கேப்டனின் கடைசி ஆசை என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் இப்போது தேமுதிக தலைமை அலுவலகத்தில் திரண்டு வரும் கூட்டத்தால் நெருக்கடியாகிவிடும் போலிருக்கிறது.
நாளை மத்திய அமைச்சர்கள், ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட நட்சத்திரங்கள், வேறு மாநில சினிமா பிரமுகர்கள் எல்லாம் வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல… தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான விஜயகாந்த் தொண்டர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விஜயகாந்த் முகத்தை கடைசியாக ஒரு முறை காண வேண்டுமென்றால் வேறு இடத்தில் அஞ்சலிக்காக வைக்க வேண்டும். கேப்டன் இறுதி நிகழ்வுகளில் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது’ என்று பேசியிருக்கிறார்கள்.
இதன் பிறகுதான் சென்னை கடற்கரை சாலையில் உள்ள தீவுத் திடலில் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை விஜயகாந்தின் உடல் தீவுத் திடலில் வைக்கப்பட்டு அதன் பின் 1 மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் தேமுதிக அலுவலகம் நோக்கி நடைபெறுகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
விஜயகாந்த் உடலுக்கு இளையராஜா, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் அஞ்சலி!
வெளி மாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் ரசிகர்கள்… மக்கள் வெள்ளத்தால் திணறும் கோயம்பேடு!