விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் வாகனங்கள் செல்ல ஒத்துழைப்பு தருமாறு, பிரேமலதா விஜயகாந்த் ஒலி பெருக்கியில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று(டிசம்பர் 28) காலமான தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 29) மதியம் 2.51 மணிக்கு விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் இருந்து வாகனத்தில் புறப்பட்டது.
அங்கிருந்து ஈ.வே.ரா சாலை வழியாக சென்னை கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தை சென்றடைய உள்ளது. ஊர்வலம் செல்லும் சாலையின் இரு புறங்களிலும் விஜயகாந்த் புகைப்படம் மற்றும் தேமுதிக கொடியை ஏந்தியபடி “கேப்டன்…கேப்டன்” என ரசிகர்கள், தொண்டர்கள் கோஷமிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதி ஊர்வலத்தின் போது தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் வாகனம் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒலிபெருக்கி மூலம் வாகனங்கள் செல்ல ஒத்துழைப்பு தருமாறு வாகனத்தில் இருந்தபடி பிரேமலதா விஜயகாந்த் உருக்கத்துடன் கேட்டு கொண்டார்.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெறும் வரை, பூந்தமல்லி சாலையில் செல்வதை வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறு காவல்துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று (டிசம்பர் 29) மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த் உடல் கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இறுதி சடங்கின் போது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோயம்பேடு தேமுதிக அலுவலக வாயிலில் பெரிய எல்.இ.டி திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் : தீர்மானம் நிறைவேற்றம்!