தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நடைபெறும் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று (டிசம்பர் 28) காலமானார். அவரது உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் 1 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்களுடன் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
விஜயகாந்தின் இறுதிச்சடங்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 4.45 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு உறவினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 200 பேருக்கு மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நடைபெறும் கட்சி அலுவலகத்தில் தேமுதிக தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் பூந்தமல்லி சாலையில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் இறுதிச்சடங்கை அமைதியாக நடத்த தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும் என, காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்க மறுத்த தொண்டர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், லேசான தடியடி நடத்தி காவல்துறையினர் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயகாந்த் மறைவு: துக்கத்தில் பங்கெடுக்க சொன்ன மோடி… கிளம்பி வந்த நிர்மலா சீதாராமன்
விஜயகாந்த் – ராவுத்தர் வெற்றி கூட்டணி: விஜயகாந்த் எழுதிய உருக்கமான கடிதம்!