அண்ணாமலையின் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் தேமுதிக கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று (ஜூலை 28) உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் விதமாக மாநில தலைவர் அண்ணாமலை ’என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28) மாலை தொடங்க இருக்கும் இந்த நடைபயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
தொடக்க விழாவில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க உள்ளார்.
நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிரான முற்றுகை போராட்டம் காரணமாக பாமக தரப்பில் இருந்து யாரும் பங்கேற்க போவதில்லை என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்ட தேமுதிக தரப்பில் யார் ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்கள் என்பது நேற்று இரவு வரை உறுதியாகவில்லை.
இந்த நிலையில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் கரு.நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.
மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்
வேலாம்மாள் பாட்டி மறைவு: முதல்வர் இரங்கல்!