மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (டிசம்பர் 29) காலை 6 மணி முதல் தீவுத் திடலில் வைக்கப்பட்டுள்ளது.
விடிய விடிய பொதுமக்களும் ரசிகர்களும் தொண்டர்களும் தேமுதிக தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், அங்கே இட வசதி போதாததால் நேற்று மாலையே தீவுத் திடலில் உடல் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று இரவே சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணனின் ஒருங்கிணைப்பில் மாநகராட்சி ஊழியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தீவுத் திடலுக்கு சென்று பணிகளை மேற்கொண்டனர். ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ,எஸ். தீவுத் திடலுக்கு சென்று அவற்றை ஆய்வு செய்தார்.
விஜயகாந்தின் உடலை வைப்பதற்கான மேடை, அஞ்சலி செலுத்துவதற்கான வரிசைகள் ஆகியவற்றை விரிவாக ஏற்பாடு செய்தனர். அவருக்கு அரசு மரியாதை அறிவிக்கப்பட்டிருப்பதால் முழுமையாக அரசே இதைச் செய்தது.
அதிகாலை 4 மணிக்கு விஜயகாந்தின் உடலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து தீவுத் திடலுக்கு எடுத்து வந்தனர். அந்த அதிகாலையிலும் விஜயகாந்த் உடலோடு ஆயிரக்கணக்கான பேர் தீவுத் திடல் வரை வந்தனர்.
தீவுத் திடலில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் போலீஸார் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கு ஒரு சலிப்புணர்வே ஏற்படும்.
ஆனால் விஜயகாந்தின் இறுதி நிகழ்வுகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பல போலீஸாரிடம் நாம் பேசுகையில், ‘சார்… எங்களுக்கு கஷ்டமாதான் இருக்கு. கோயம்பேடுல நேத்தெல்லாம் பெண் காவலர்கள், ஆண் காவலர்கள் என யாருக்கும் இயற்கை உபாதை கூட போக முடியலை. அவ்வளவு கூட்டம். கன்ட்ரோல் பண்ணி பண்ணி களைச்சுப் போச்சு.
இதோ இன்னிக்கு விடிகாலையில மறுபடியும் அவர் உடலை தீவுத் திடலுக்கு கொண்டுவரும்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செஞ்சோம். இங்கயும் பாதுகாப்புக்கு நிக்கிறோம்.
ஆனாலும் சலிப்பு ஏற்படலை. ஏன்னா விஜயகாந்த்தோட பல படங்கள்ல அவர் போலீசா நடிச்சிருக்காரு. போலீஸ் வேலையை கௌரவிக்கிற மாதிரி பல படங்கள் எடுத்திருக்காரு. அவர் அரசியல்வாதி ஆன பிறகு கூட போலீஸ் காரங்களை மதிச்சாரு.
எல்லாரும் அஞ்சலி செலுத்துறதுக்கு நாங்க பாதுகாப்பு கொடுக்குறோம். விஜயகாந்துக்கு இதான் சார் எங்க அஞ்சலி” என்கிறார்கள் நெகிழ்ச்சியாக.
இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், மத்திய அமைச்சர்கள், வேறு மாநில சினிமா அரசியல் பிரமுகர்கள் என பலரும் அதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்களும் திரண்டு வருவதால் தீவுத் திடல் கண்ணீர் கடலாக மாறி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
பொதுக்குழுவில் விஜயகாந்தை பார்த்தபோது… ரஜினிகாந்த் வேதனை!
தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அஞ்சலி!