தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை மியாட் மருத்துவமனையில் மீண்டும் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த நவம்பர் 18-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். இரு வார கால சிகிச்சைக்கு பிறகு டிசம்பர் 11-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். பின்னர் டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில், நேற்று (டிசம்பர் 26) திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விஜயகாந்த், மருத்துவர்கள் பரிந்துரைப்படி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தொடர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…