தேமுதிக பொதுக்குழு எப்போது? பிரேமலதா தகவல்!

Published On:

| By Prakash

“மக்கள் பிரச்சினைக்காக தேமுதிகதான் முதல் ஆளாகப் போராடுகிறது” என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தன்னுடைய 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெறுவதற்காக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 25) வந்திருந்தார்.

அப்போது விஜயகாந்த் அவர்களை நோக்கி கைக்கூப்பி, நன்றி தெரிவித்தார்.

பின்னர் இன்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,

“நீண்டநாட்களாக கேப்டனைச் சந்திக்க வேண்டும் எனத் தொண்டர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவருடைய பிறந்த நாளான இன்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

தொண்டர்களை கேப்டன் சந்தித்ததில், மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறார். அரசியல் மற்றும் சினிமாவுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் ஒரு மனிதநேயமிக்க தலைவர் ஒருவர் இருக்கிறார் என்றால், அது நம் கேப்டன் மட்டும்தான்.

கேப்டன் பிறந்த நாள் மட்டுமல்ல, எந்த நாளாக இருந்தாலும் எத்தனை ஆண்டுக் காலமானாலும் உணவு வழங்குவது தொடரும்.

தேமுதிக இன்றும் எழுச்சியுடன்தான் இருக்கிறது. தற்போது உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அது, இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த தேர்தல் முடிவடைந்தபிறகு, செயற்குழு, பொதுக்குழு இருக்கிறது.

ஆகையால் தேமுதிகவின் பணிகள் தொய்வில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்றவரிடம், “அனைத்து பிரச்சினைகளுக்கும் தேமுதிக தரப்பில் வெறும் அறிக்கை மட்டும்தானே வருகிறது” என நிருபர் ஒருவர் கேட்க, அதற்குப் பதிலளித்த பிரேமலதா, “நீங்கள் சென்னையில்தானே இருக்கிறீர்கள்.

நான் நேரில் வருவதைப் பார்க்கவில்லை போலும். எல்லாவற்றுக்கும் முதல் ஆளாக தேமுதிகதான் களத்தில் இறங்கி, அனைத்துப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது. எல்லாப் போராட்டங்களும் என் தலைமையில்தான் நடைபெற்றது.

இனியும் மக்கள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதற்கும் முதல் ஆளாக தேமுதிகதான் களத்தில் இருக்கும். மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தேமுதிக போராடும்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

“வானத்தைப் போல” பரந்த மனது: விஜயகாந்த்துக்குத் தலைவர்கள் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel