ஆக்சன் ஹீரோ- அதிரடி அரசியல்வாதி- மீண்டும் கர்ஜிப்பாரா விஜயகாந்த்?

அரசியல்

‘என் வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும், ஏன் ஒவ்வொரு நொடியையும் நானா செதுக்குனது டா’ என நடிகர் அஜித்தின் பில்லா படத்தில் ஒரு வசனமுண்டு.

அந்த வசனங்களுக்கு எல்லா வகையிலும் பக்காவாக பொருந்தக்கூடியவர் நடிகர் விஜயகாந்த்..

எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஆலமரமாக வளர்ந்தவர். அரசியலில் ஆலமரமான திமுகவையே கூட்டணிக்காக காக்க வைத்தவர் என பல அதியசங்களுக்கு சொந்தக்காரர் நடிகர் விஜயகாந்த்.

மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ‘விஜயராஜ்’.

இளம் வயதில் படிப்பில் ஆர்வம் இல்லை என்பதால் சொந்த அரிசி மில்லைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்தார் அவரது தந்தை அழகர்சாமி.

சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம் அவரை நண்பர்கள் இப்ராஹிம் ராவுத்தர், லியாகத் அலிகானோடு 1978-ல் சென்னைக்கு அழைத்து வந்தது.

vijayakant a hero

அடுத்த ஆண்டே இயக்குநர் எம்.ஏ.காஜா வின் ‘இனிக்கும் இளமை’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

மதுரை விஜயராஜை விஜயகாந்த் ஆக மாற்றினார் இயக்குநர் எம்.ஏ.காஜா. இந்த பெயர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும் புயலாக சுழலும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இந்தித் திணிப்பு போராட்டம் உச்சத்திலிருந்த சமயம் திமுகவின் கொள்கை பிடிப்பு கவரவே விஜயகாந்தும், அவரது அண்ணன் நாகராஜும் திமுக அபிமானிகளாகி விட்டார்கள்.

vijayakant a hero

சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாகக் கொடிகட்டிப் பறக்க மறுபுறம் ரசிகர் மன்றம் மூலமாக இலங்கைத் தமிழர் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டி 1984,1986 ல் ரசிகர் மன்றம் மூலம் போராட்டம்..

நலத்திட்ட உதவிகள் வழங்குவது, இலவச மருத்துவமனை கட்டி தருவது, கார்கில் போர், குஜராத் பூகம்பம், ஒடிஷா வெள்ளம், ஆந்திரப் புயல், கும்பகோணம் தீ விபத்து, சுனாமிப் பேரழிவு என்று எல்லாவற்றிலும் முதல் ஆளாக நிதி கொடுப்பது என தன் குணத்தால் தனி முத்திரை பதித்தார் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த்

vijayakant a hero

இதனைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு விஜயகாந்த் – பிரேமலதா திருமணத்தை மதுரையில் நடத்தி வைத்தார் கலைஞர்!

vijayakant a hero

விடுதலை புலிகளின் மீதும், அதன் தலைவர் பிரபாகரன் மீதும் அவர் வைத்திருந்த நேசத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரின் 100 வது படத்துக்கு கேப்டன் பிரபாகரன்’ எனவும், மூத்த மகனுக்கு `விஜய பிரபாகரன்’ எனவும் பெயர் வைத்தார் விஜயகாந்த்.

இந்த படத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்த் ஆக மாறினார். ரசிகர் மன்றங்கள் மூலமாக தனி அரசாங்கமே நடத்தி வந்த விஜயகாந்த் 2000 ஆம் ஆண்டு, ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர்.

இந்த வெற்றி பலருக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி திருமண விழாவில் விஜயகாந்த் வருகையை முன்னிட்டு கட்டப்பட்ட மன்றக் கொடிக்கம்பங்களை பா.ம.கவினர் வெட்டிச் சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ராமதாஸ் – விஜயகாந்த் இடையே நடைபெற்ற வார்த்தை போர் – கண்டன போஸ்டர்கள், வெட்டி சாய்க்கப்பட்ட கொடி கம்பங்கள் என பூதாகரமாக நீடித்தது பிரச்சனை.

பாமக கோட்டையில் வெற்றி

இது தான் சரியான தருணம் என தமிழகமே இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் லட்சக்கணக்கான மக்களை மதுரையில் திரட்டி 2005 செப்டம்பர் 14 ல் `தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். ‘2006’ சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கிய தேமுதிகவில் விஜயகாந்த் மட்டுமே பாமகவின் கோட்டையான விருதாச்சலத்தில் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பத்து சதவிகிதமாக உயர்ந்தது தேமுதிகவின் வாக்கு வங்கி.. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கை கோர்த்த விஜயகாந்துக்கு 41 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா .29 தொகுதிகளில் வெற்றி பெற்றது தே.மு.தி.க. வாக்கு சதவிகிதம் 7.9 ஆகக் குறைந்தாலும் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் சென்றார் விஜயகாந்த்.

ஆனால் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இந்த கூட்டணி முறிந்தது. தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுகவுக்கு இழுத்து விஜயகாந்த்தின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை காலி செய்தார் ஜெயலலிதா.

2014 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கிய தேமுதிக போட்டியிட்ட 14 இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் கூட்டணிக்கு கலைஞர் உட்பட பலரும் காத்திருக்க பா.ம.க, விசிக, தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் மக்கள் நல கூட்டணியில் இணைந்தது தேமுதிக. முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய விஜயகாந்த் உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் டெபாசிட்டை இழந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

104 தொகுதிகளில் போட்டியிட்டு 103 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்ததுடன் 2.39 ஆகக் குறைந்தது தே.மு.தி.கவின் வாக்கு சதவிகிதம்.

இதனைத் தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது தே.மு.தி.க.

2018 கால கட்டத்திலிருந்தே உடல்நல பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தும், தனது இல்லத்தில் ஓய்வெடுத்தும் வருகிறார் நடிகர் விஜயகாந்த். இன்று 70ஆவது பிறந்தநாளை சந்திக்கும் விஜயகாந்த் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், மீண்டும் உடல்நிலை சீராகி பூரண குணத்துடன் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம்..

vijayakant a hero

அவரின் உதவும் குணத்துக்கும், செய்த தொண்டுகளுக்கும் பிரதிபலனாகப் பூரண குணத்துடன் மீண்டு வருவார் கேப்டன் விஜயகாந்த். காத்திருப்பது அவர்களின் தொண்டர்கள் மட்டுமல்ல தமிழகமும் தான்.

க.சீனிவாசன்

ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை : எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *