டிஜிட்டல் திண்ணை: 6 மாத ஆபரேஷன்… அசால்ட் அண்ணாமலை… ஆதங்கத்தில் பொன்னார்- விஜயதரணி கேட்டது பாஜகவில் கிடைக்குமா?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜகவில் சேர்ந்த வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“விஜயதரணி கடந்த இரு வாரங்களாகவே பாஜகவுக்கு செல்லப் போகிறார் என்ற தகவல்கள் அலையடித்துக் கொண்டிருந்த நிலையில்… பிப்ரவரி 24 அன்று டெல்லியில் பாஜக அலுவலகத்தில் விஜயதரணி சேரப் போகிறார் என்று மின்னம்பலத்தில் பிப்ரவரி 23 இரவு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படியே இரு வார யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார் விஜயதரணி.
விஜயதரணி கடந்த 6 மாதங்களாக பாஜகவிடம் பேசி வந்திருக்கிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போராடி சீட் பெற்ற விஜயதரணி, அதன் பின் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அது செல்வப்பெருந்தகைக்கு போனது. அதன் பின் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி அதற்காக டெல்லியில் லாபி செய்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அடுத்து வரும் தேர்தலிலும் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்திருந்தார் விஜயதரணி.

4 பேர், மேடை மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

இந்த நிலையில்தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே டெல்லியில் உள்ள தனது நண்பர்கள் மூலம் பாஜகவில் சேர்வதற்கான செயல் திட்டத்தைத் தொடங்கினார் விஜயதரணி.
இந்த நிலையில், மாநிலத் தலைவர் பதவிக்கு ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோரது பெயர்கள் கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டன.

இந்த நிலையில் ஓரிரு வாரங்களுக்கு முன்பு, ‘மாநில காங்கிரஸ் தலைவர் பதவி செல்வப்பெருந்தகை என்றும், அவர் வகித்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ராஜேஷ்குமார் என்றும் விஜயதரணிக்கு உறுதியான தகவல்கள் கிடைத்தன.

அடுத்த சட்டமன்றக் கட்சித் தலைவராக தனது மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் நியமிக்கப்பட போகிறார் என்ற தகவலை உறுதியாக அறிந்ததும், பாஜக மேலிடப் பொறுப்பாளரான கேரளாவைச் சேர்ந்த அரவிந்த மேனனிடம் நேரடியாக தானே பேசியிருக்கிறார் விஜயதரணி.
அப்போது விஜயதரணி கேட்டது, ‘நான் பாஜகவில் சேர்ந்தால் எனது எம்.எல்.ஏ. பதவி இருக்காது. நீங்கள் வரும் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை எனக்கு தர வேண்டும்’ என்பதுதான்.

இதற்கு பாஜக மேலிடம் உடனடியாக எந்த ஒப்புதலும் தரவில்லை. ஆனாலும் கடந்த சில நாட்களாக டெல்லியிலே தங்கியிருந்து தனது நிபந்தனையை பாஜக மேலிடத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார் விஜயதரணி.

கன்னியாகுமரி தொகுதி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் உயிரைக் கொடுத்து பாஜகவை வளர்த்த தொகுதி. இங்கே பொன்னார் நிறுத்தப்படவில்லை என்றால் இன்னொரு ஆர்.எஸ்.எஸ் காரர்தான் நிறுத்தப்படவேண்டும் என்பது அந்த அமைப்பின் நோக்கம். அதனால் விஜயதரணிக்கு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பற்றியோ, அது இல்லையென்றால் ராஜ்யசபா என்பது பற்றியோ எந்த உத்தரவாதத்தையும் பாஜக வழங்கவில்லை என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

4 பேர் மற்றும் கோவில் இன் படமாக இருக்கக்கூடும்

மேலும் பிப்ரவரி 22 ஆம் தேதிதான் கன்னியாகுமரி தொகுதிக்கான தேர்தல் பணிமனையை பூஜைகள், யாகங்களோடு திறந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் மீண்டும் கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளராக வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் அலுவலகம் திறந்துள்ளார். இந்த நிலையில் விஜயதரணி கொடுத்த பேட்டியில் கன்னியாகுமரி எம்பி தொகுதி பற்றி பேசியதைப் பார்த்துவிட்டு ஆதங்கப்பட்டிருக்கிறார்.

மோடி கலந்துகொள்ளும் நடைப்பயண நிறைவு விழாவில் மாற்றுக் கட்சிப் பிரமுகர்களை இணைக்கத் திட்டமிட்டு தீவிரமாக வேலை செய்து வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஆனால் விஜயதரணியோ தமிழகத்தில் இணையமாட்டேன், டெல்லியில்தான் இணைவேன் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இந்த நேரத்தில் தனது நடைப்பயணத்தை முடிக்க வேண்டிய பணிகள் இருப்பதால் விஜயதரணி கட்சியில் இணையும் நிகழ்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. ஓரிரு வாரங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இணைப்புக்காக டெல்லி சென்ற அண்ணாமலை, மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் அதுவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் விஜயதரணி பாஜகவில் இணையும் நிகழ்வில் பங்கேற்காதது அவரது முன்னுரிமைக் கண்ணோட்டத்தை எடுத்துக் காட்டுகிறது.

அதேபோல பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில்தான் பாஜகவில் சேரவேண்டும் என்று விஜயதரணி விரும்பிய நிலையில்… விஜயதரணியின் நிபந்தனைகளில் மாற்றுக் கருத்துகள் இருந்ததால்தான், நட்டா கலந்துகொள்ளாமல் அவரது அறிவுறுத்தலின் பேரில் எல். முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதன் பின் இன்று இரவு ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் விஜயதரணி.

5 பேர் மற்றும் கோவில் இன் படமாக இருக்கக்கூடும்

வரும் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி சீட், அல்லது ராஜ்யசபா சீட் என்ற நிபந்தனையை பாஜகவிடம் வைத்திருக்கிறார் விஜயதரணி. இந்த இரண்டில் ஒன்று கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், விஐபிகள் மற்றும் தனக்கு அறிமுகமான அரசியல் புள்ளிகளை பாஜகவுக்குக் கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கிறார் விஜயதரணி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

சசிகலா வீட்டில் ரஜினி

மக்களவை சீட் ஓகே…. மாநிலங்களவை சீட் என்னாச்சு? : காதர் மொய்தீன் பதில்!

+1
0
+1
5
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *