“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சட்டப்படி சந்திப்போம்” – குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கர் பேட்டி!

அரசியல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, அடிப்படையில் உண்மைக்கு மாறாக, சொல்லாததை சொல்லியது போலவும், சொல்லியதை இல்லாதது போலவும், இட்டுக்கட்டி கூறப்பட்டிருப்பதாகவும், இதை சட்டப்படி சந்திப்பேன் என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்களோ, முன்னணி தலைவர்களோ இதுவரை கருத்து எதுவும் கூறாமல் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில், ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஏழு நாட்கள் கழித்து, அது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புரட்சி தலைவி அம்மா அவர்கள் மீண்டும் குணமாகி நலமோடு வரவேண்டும் என வேண்டி பிராத்தனை செய்த லட்சோப லட்ச தொண்டர்களில் நானும் ஒருவன்.

ஒரு அமைச்சராக என் கடமையை மனசாட்சியோடு செய்துள்ளேன். ஆறுமுகசாமி ஆணையத்தின் கருத்துக்கள் அடிப்படையில் உண்மைக்கு மாறாக, சொல்லாததை சொல்லியது போலவும், சொல்லியதை இல்லாதது போலவும், இட்டுக்கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள எல்லா பத்திரிக்கைகளிலும் ஆணையத்தின் கருத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன.

எங்களை பொறுத்தவரை, அம்மாவை இழந்து தவிக்கின்ற எங்களுக்கு, வெந்த புண்ணிலே வேலை பாச்சுவது போல் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “பொது வாழ்க்கையில் இருக்க கூடிய நாங்கள் இதை சட்ட வல்லுனர்களோடு கலந்து சட்டப்படி நேர்மையோடும், நெஞ்சுரத்தோடும் இதை எதிர்கொள்வேன்” என தெரிவித்தார்.

முன்னாள் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனையும் விசாரிக்க வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரை குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர்,

“அவர் இந்திய அளவிலும் உலகளவிலும் பாராட்டப்பட்ட நேர்மையான, தூய்மையான அதிகாரி என எல்லோருக்கும் தெரியும்.

இந்த கொரோனா காலத்தில் உலகமே உயிர் பயத்தில் வீட்டில் முடங்கியிருந்த போது நான் களத்திலே இருந்தேன். என்னோடு உயிரை துச்சமென மதித்து களத்திலே இருந்த அதிகாரி அவர்.

அவரைப்பற்றியும் அதில் ஆதாரமற்ற கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நானாக இருந்தாலும், அவராக இருந்தாலும் எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. இதை சட்டப்படி எதிர் கொள்வோம்” என தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் சசிகலா, மருத்துவர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் செய்தவர்களாக முடிவுசெய்து நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது

விஜயபாஸ்கரின் இந்த கருத்துக்கள், ஆணையத்தின் அறிக்கையை எதிர்த்து அதிமுக நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளது என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.

வினோத் அருளப்பன்

தி பாஸ் ரிட்டர்ன்ஸ் : ஆக்‌ஷன் கெட்டப்பில் விஜய்

வாத்தி : மிரட்டல் லுக்கில் தனுஷ்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *