வரிபாக்கியில் 20 சதவீதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியும் விஜயபாஸ்கர் கண்டுகொள்ளாததால் சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
2017 ஆம் ஆண்டு ஆர். கே. நகர் தொகுதி இடை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தநிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், ரூ. 206.42 கோடி வரி பாக்கியை வசூலிக்க புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம் மற்றும் 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
இதை எதிர்த்து விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்த வங்கி கணக்குகளில் தான் எம். எல். ஏ சம்பளமும், அரசு நிதியும் வருவதாகத் தெரிவித்திருந்தார்.
வங்கி கணக்குகளை முடக்கி வைத்திருப்பதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியவில்லை என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நவம்பர் 29 விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.
அதன்படி இன்று (டிசம்பர் 1) வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
வருமானவரித்துறை அதிகாரி குமார் தீபக்ராஜ் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “2011 முதல் 2018 வரையுள்ள உரிய வரியை செலுத்த உத்தரவிட்ட போதும், விஜயபாஸ்கர் வரி செலுத்தாததால் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.
முடக்கப்பட்ட வங்கி கணக்கு ஒன்றில் இருந்து 2022 இல் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொந்த செலவிற்காக மட்டுமே பணம் எடுத்துள்ளார். தொகுதிக்காக எந்த நிதியையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனையில் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்தது உறுதியாகி உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தாததால் சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டன என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை வேறு யாருக்கும் விற்கக் கூடாது என்பதற்காகவும், அரசுக்கு வருவாய் இழப்பை தடுப்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுதொடர்பாக பதில் அளிக்க விஜயபாஸ்கர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் டிசம்பர் 12 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
கன்னடம் Vs மராத்தி: மாணவன் மீது தாக்குதல்!
ஆன்லைன் மோசடி: 6 நாளில் ரூ.32 லட்சத்தை இழந்த இளைஞர்!