“வருமானவரித்துறை சோதனை நடத்தியதன் மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடவில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை செங்குன்றம் அருகேயுள்ள குட்கா குடோனில் கடந்த 2016ஆம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் டைரிகள் சிக்கின.
இதுதொடர்பான வழக்கு 2018ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் 246 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டு மூன்று அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது சிபிஐ இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது குட்கா வழக்கு தொடர்பாக, சிபிஐ தமிழக அரசிடம் அனுமதி கேட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், ” குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும் என சிபிஐ அனுமதி கோரினால் தமிழக அரசு அனுமதி தந்துதான் ஆக வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும்போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்கள். ஆனால் வருமானவரித்துறை சோதனை நடத்தியதன் மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடவில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிது” என்றார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இருவரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- க.சீனிவாசன்