ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான அரசு மருத்துவர்கள் பலர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வலையில் மாட்டியிருக்கிறார்கள்.
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர், தாம்பரம், சென்னை, மதுரை, தேனி, புதுக்கோட்டை என 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மஞ்சங்கரனையில் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.
300 படுக்கைகளுடன் உள்நோயாளிகள் பிரிவு என இங்கு மருத்துவமனை இயங்கி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கல்லூரிக்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடாக அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம் வேல்ஸ் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
இதேபோன்று மதுரையில் விஜயபாஸ்கரின் நண்பரான தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜி நாதன் என்பவரின், புதூர் – ஜவகர்புரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிகாலை முதல் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், பின்னர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சேலம் அரசு மருத்துவமனை டீனாக பணியாற்றியவர்.
சேலத்தில் மூன்று அரசு மருத்துவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மனோகர், சுஜாதா மற்றும் வசந்தகுமார் ஆகிய மூன்று பேர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சேலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் உள்ள பாரதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மருத்துவர் வசந்தகுமார் வீட்டிலும், சேலம் பழனியப்பா நகர் பகுதியில் வசித்து வரும் மருத்துவர் சுஜாதா வீட்டிலும் சோதனை நடக்கிறது.
அதேபோல சேலம் சீரங்கப்பாளையம் பகுதியில் வசித்து வரும் மருத்துவர் மனோகர் வீட்டிலும் இன்று(செப்டம்பர் 13) காலை முதல் சென்னை மற்றும் சேலத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கலை.ரா
வேலுமணி வீட்டில் ரெய்டு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது!