சொத்து மற்றும் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், ரூ. 206.42 கோடி வரி பாக்கியை வசூலிக்க புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம் மற்றும் 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
இதை எதிர்த்து விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்த வங்கிக்கணக்குகளில் தான் எம்.எல்.ஏ சம்பளமும், அரசு நிதியும் வருவதாகத் தெரிவித்திருந்தார்.
அந்த வங்கி கணக்குகளை முடக்கி வைத்திருப்பதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியவில்லை என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று(நவம்பர் 29) விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு நாளை மறுநாளுக்குள் பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.
கலை.ரா
முடிவுக்கு வரும் முதற்கட்ட பிரச்சாரம்: களைகட்டும் குஜராத் தேர்தல்!