விஜய் எங்கே இருக்கிறார்?, மாநாட்டுக்கு எப்படி வருவார்? போலீஸ் டென்ஷன்!

Published On:

| By Aara

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) மாலை விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற  உள்ள நிலையில், இன்று காலையில் இருந்தே தமிழகம் எங்கிருந்தும் தொண்டர்கள் கூட்டம் குவியத் தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையில்  நேற்று (அக்டோபர் 26) இரவு ஒரு தனியார் வாகனத்தில் விஜய் மாநாட்டு மைதானத்துக்கு வந்து  ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்றார். மாநாட்டு மைதானத்தைச் சுற்றி ஊடக கேமராக்கள் கண்விழித்து நின்ற நிலையிலும்… அவர்களுக்கே தெரியாமல் வேறொரு வாகனத்தில் வந்து சென்றார் விஜய்.

இந்நிலையில், இன்று காலை முதலே தொண்டர்கள் கூட்டம்  கூட்டமாய் விக்கிரவாண்டியில் குவிய ஆரம்பித்துள்ளனர்.  தேசிய நெடுஞ்சாலையில்  மாநாட்டு நடைபெறும் இடத்துக்கு  இரு திசையிலும்  ஐந்து  கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நடந்தே செல்லும் அளவுக்கு டிராபிக் அதிகரித்துள்ளது.

மேடைக்கு பின்னால் நான்கைந்து கேரவன் வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில்தான் விஜய் இருக்கிறார் என்று அந்த வேன்களை நோக்கி இரவில் இருந்தே தொண்டர்கள் சுற்றிச் சுற்றி வந்தனர். விஜய் கேரவன் வேனுக்கு அருகே நிற்பது போன்ற வீடியோவும் வெளியானதால் விஜய் ஏற்கனவே மாநாட்டுத் திடலுக்கு வந்துவிட்டார் என்றும் தொண்டர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், விஜய் எங்கே இருக்கிறார்  என்று போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது,

”விஜய் மாநாட்டுக்கு வரும் நேரம் அவரை கூட்ட நெரிசலில் இருந்து, பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் செல்லும் ஆலோசனையில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடமும், விஜய்யிடமும் இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் பேசியிருக்கிறார்கள்.

மாநாட்டு நடைபெறும் இடத்துக்கு விஜய்  வந்து, அங்கே அவர் கொடியேற்றி  விட்டு… மேடைக்கு வந்து,  மேடையின் எதிரே சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும்  ரேம்ப் பாதையில்  இருபுறமும் திரண்டிருக்கும் தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டே நடந்து மேடைக்கு செல்வதுதான்  மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் திட்டம், இதை போலீஸாரிடமும் தெரிவித்துவிட்டார்கள்.

ஒவ்வொரு மணி நேரமும் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், போலீஸார் விஜய்யின் வருகையில் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி விஜய் மாநாட்டு ஸ்பாட்டுக்கு வரும் வரை அவரது வருகையை ரகசியமாக வைப்பது என்று முடிவெடுத்துள்ளனர். இப்போது விஜய் இருக்கும் இடம் போலீஸ் உயரதிகாரிகள், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட ஒரு சிலருக்கே தெரியும் என்பதுதான் மாநாட்டு நிலவரம்!” என்கிறார்கள்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தவெக மாநாடு : சாரை சாரையாக வரும் கூட்டம் : கடும் போக்குவரத்து நெரிசல்!

“வெளிச்சம் போட்டுக் காட்டிய விஜய்” : ஆதவ் அர்ஜுனா வரவேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share