நடிகர் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நடிகர் விஜய்யும் தன் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது, விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது,
பொது பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பது, திரைப்படங்களில் அரசியல் தவறுகளை சுற்றிக் காட்டுவது, ஏழை மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலை அமைத்துக் கொடுப்பது,
சமீபத்தில் கூட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவது என தொடர்ந்து பல விஷயங்களை செய்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் இந்த செயல்கள் அனைத்துமே அவரது அரசியல் களத்திற்கான தொடக்கம் ஆக தான் பார்க்கப்படுகிறது.
விஜய்யின் இந்த அரசியல் ஆசையினால் சில அரசியல் தலைவர்களுக்கும், விஜய்க்கும் இடையே சின்ன சின்ன மனக்கசப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் திரைப்படங்களில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் தொடர்ந்து நடிப்பதினாலும் அதை காரணமாக வைத்து சில அரசியல் தலைவர்கள் நடிகர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பல இடங்களில் நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை விமர்சித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 9) பிறந்தநாள் கொண்டாடும் பாமக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸுக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.
இதே போல் சமீபத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்தநாள் கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் தொலைபேசி மூலமாக நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமில்லாமல் மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளின் போது நடிகர் விஜய் தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் இந்த செயல், அவரின் புதிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. மேலும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணிக்கு நம்பிக்கையை தந்த கார்கில் தேர்தல்!
அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!