அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் களம் இறங்கிய விஜய், கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
கட்சியின் கொள்கை, செயல்திட்டங்கள் என்பதை எல்லாம் தாண்டி, கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு, பாசிசம் – பாயசம் போன்ற விஜய்யின் கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடையே மிகப்பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தவெக மாநாட்டை விஜய் நடத்திய வெறும் ஷூட்டிங் என பல்வேறு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன் மீது முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் விஜய் எப்படி பதிலடி கொடுக்க போகிறார் என அக்கட்சியினர் ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்தவித கருத்தும் தெரிவிக்காத விஜய், அடுத்ததாக இயக்குநர் ஹெச்.வினோத்தின் ’தளபதி 69’ திரைப்படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம்.
அதன்படி வரும் நவம்பர் 4ம் தேதி முதல் தனது கடைசி படமாக அறிவித்துள்ள தளபதி 69 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
விஜய் கூறும் பதிலை சுட்டிக்காட்டி, பிறக் கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் என அவரது கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில், ரியல் ஷூட்டிங்கிற்கு செல்வதாக விஜய் எடுத்த முடிவு அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா