வைஃபை ஆன் செய்ததும் இன்று (அக்டோபர் 19) ரிலீசான விஜய்யின் லியோ படத்துக்கு அதன் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள லியோ படம் சினிமா ரீதியான விமர்சனங்களை கலவையாக பெற்று வருகிறது. அதேநேரம் விஜய்யின் படங்களுக்கு முன் எப்போதும் இருந்திடாத வகையில் வேறு வகையான எதிர்பார்ப்பும் , படத்தின் ஒவ்வொரு அம்சம் பற்றிய விவாதமும் லியோவுக்கு அதிகமாகவே இருந்தன.
காரணம் விஜய் அரசியலுக்கு வரப்போகும் முடிவை திடமாக எடுத்து அதை நோக்கிய நகர்வுகளை வேகமாக செய்து வரும் நேரத்தில் தான் இந்த லியோ வெளி வந்திருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு, அதன் கட்டமைப்பு விரிவாக்கப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை விஜய் அவர்களது பெற்றோருடன் சென்னைக்கு அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.
வெறும் மாணவர்களாக அவர்களை பார்க்காமல் எதிர்கால வாக்காளர்களாக விஜய் நோக்குகிறார் என்றும் அப்போது விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டது. இதற்கு திமுக அரசின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்ற விவாதங்கள் விஜய் ரசிகர்களால் சமூக தளங்களில் பகிரப்பட்டன.
அதையும் தாண்டி கடந்த சில நாட்களாக லியோ படத்துக்கு அதிகாலை சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது குறித்து, அதிமுக- நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விஜய்க்கு திமுக பயந்துவிட்டது என்று வெளிப்படையாக விமர்சனம் செய்தார்கள்.இந்த பின்னணியில்தான் இன்று லியோ படம் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று காலையிலிருந்து முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன் மேற்பார்வையில் இயங்கி வரும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் விஜய்யின் செல்வாக்கு பற்றிய ஒரு திடீர் சர்வேயில் இறங்கினார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் முதல் மாநகரம் வரை விஜய்க்கு பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைப்பவர்கள் யார் யார்? அவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் என்ன செல்வாக்கு இருக்கிறது என்பது பற்றிய விவரங்களை சேகரித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு கிடைத்த விவரங்கள்படி சுமார் 60 முதல் 65 சதவீத கிராமங்களில் சாதி, மத வேறுபாடு இன்றி எல்லா பகுதிகளிலும் விஜய்க்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வைப்பவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் 20 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள்தான். அவர்கள் தங்களது கை காசை போட்டு தான் இந்த பேனர்களை வைக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அனுப்பியிருக்கிறார்கள்.
திமுகவில் உதயநிதி தலையெடுக்கும் போதுதான் தனது அரசியல் பிரவேசம் இருக்க வேண்டும் என்று விஜய் திட்டமிட்டிருக்கிறார். இதுகுறித்து முதன் முதலாக கடந்த வருடமே மின்னம்பலத்தில் வெளியிடப்பட்டிருந்தது. தற்போதைய மூத்த தலைவரான ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் திமுக உதயநிதியை முன்னிறுத்தும் போது அவருக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்பதுதான் விஜய்யின் திட்டம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அதன்படியே இப்போது உதயநிதி ஸ்டாலின் திமுக என்ற கட்சியிலும், தமிழ்நாடு அரசிலும் தீவிரமாக முன்னிறுத்தப்பட்டு வருகிறார். இந்த நிலையில் உதயநிதிக்கு சவாலாக விஜய் இருப்பாரா என்பது பற்றிய முதற்கட்ட ஆய்வுகளை திமுக மேற்கொள்ள தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதி தான் நேற்றும் இன்றும் எடுத்திருக்கும் இந்த சர்வே என்கிறார்கள் திமுக வட்டாரங்களிலேயே” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து வாட்ஸ் அப் ஆஃப் லைன் போனது.
மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!
தேவர் ஜெயந்தி : வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி மறுப்பு!
5 மாநில தேர்தலில் வெற்றி யாருக்கு? தமிழ்நாட்டில் இருந்து ஒரு கருத்துக் கணிப்பு!