உதயநிதி-விஜய்- அண்ணாமலை: முக்கோண மோதலாகுமா தமிழக அரசியல்?

அரசியல்

தமிழ்நாட்டு அரசியல் களம் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதன் அறிகுறிகள் மிக வெளிச்சமாக தெரிகின்றன. டிசம்பர் 14ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும் முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

ஏற்கனவே அவர் கட்சி அடிப்படையில் ஸ்டாலினுக்கு அடுத்த முகம் என்று முன்னிறுத்தப்பட்டு விட்ட நிலையில்,  ஆட்சி  ரீதியான நிர்வாகத்திலும் ஸ்டாலினுக்கு அடுத்தது உதயநிதி தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது அமைச்சர் பதவி ஏற்பும்,  அதற்கு அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளும் அமைந்துள்ளன.

உதயநிதிக்கு கிடைத்த உயரம்

இந்த அமைச்சரவையில் மிக இளையவன் என்று உதயநிதி ஸ்டாலின் தன்னை அழைத்துக் கொண்டாலும் மொத்தமுள்ள 35 அமைச்சர்களில் தற்போது சீனியாரிட்டி அடிப்படையில் 10-வது இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார் உதயநிதி.

triangle politics in tamilnadu

அமைச்சரவையில் சேர்ந்த ஒரே நாளில் 25 இடங்களை பின்னுக்குத் தள்ளி 10வது இடத்துக்கு முன்னேறி இருப்பவருக்கு தனக்கு முன்னுள்ள சீனியர்களை விட முக்கியமான இடத்தை பிடிப்பதற்கு வெகு காலம் ஆகாது என்கிறார்கள். அதாவது துணை முதல்வராகவே உதயநிதி ஸ்டாலின் முடிசூட்டப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

வாரிசுக்காக காத்திருந்த வாரிசு

திமுக தனது அடுத்த தலைமுறை அரசியலை தெளிவாக தொடங்கி நடத்தி வரும் நிலையில் உதயநிதிக்காக காத்திருந்த நடிகர் விஜய்யும் சமீப நாட்களாக தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்.  விஜய் வாரிசு படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிடும் நிலையில் அதற்கு முன்பாக இந்த மாதத்திலேயே தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து சந்தித்திருக்கிறார்.  அவர்களுக்கு பிரியாணி சமைத்து போட்டு அவர்களை குஷிப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் விஜய்.  

triangle politics in tamilnadu

இது ஏதோ வாரிசு படத்துக்காக நடத்தப்படக்கூடிய சந்திப்பு அல்ல, அரசியலில் அழுத்தமாகக் காலூன்றுவதற்கான ஆலோசனைகளும் இந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பில் நடத்தப்பட்டிருக்கிறது  என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க வட்டாரத்தினர்.

அவர்களிடம் நாம் பேசும்போது,  “ஏற்கனவே மின்னம்பலம் இணைய இதழில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தீர்கள்.  ஜெயலலிதா கலைஞர் ஆகியோருக்கு சற்றும் குறையாத தலைமை பண்பாக ஸ்டாலின் இருக்கிறார் என்று கருதுகிறார் விஜய்.  அவரை எதிர்த்து அரசியல் செய்வதற்கு விஜய்க்கு விருப்பமும் இல்லை, தனக்கு தகுதியும்  இல்லை என நினைக்கிறார் விஜய்.” என்கிறார்கள்.

விஜய்யின் குரலாக ஒலித்த தில் ராஜூ

இந்த நிலையில் திமுகவில் விரைவில் உதயநிதி ஸ்டாலின் தலை எடுப்பார்,  அப்போது அவரை எதிர்த்து நேரடியாக அரசியல் செய்வது தான் தனக்கு சரியானதாக இருக்கும் என்று விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவந்தார்.  

ஏனென்றால் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால்  தற்போதைய வாரிசு வரை பாதிக்கப்பட்டிருப்பவர் விஜய். வாரிசு படத்தின் முழு விநியோக உரிமையை கைப்பற்ற  உதயநிதி சார்பில் சில காய் நகர்த்தல்கள் நடந்தன. ஆனால் விஜய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

ஏற்கனவே மாஸ்டர் படத்தை விநியோகித்த செவன் ஸ்டுடியோவிடமே கொடுத்திருக்கிறார். ஆனாலும் சென்னை, கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் வாரிசு படத்தை ரெட் ஜெயின்ட்  வெளியிடுகிறது.  இப்படி செய்யாவிட்டால் தமிழகத்தின் மீதமுள்ள பகுதிகளில் இருக்கும் தியேட்டர்களில் வாரிசு படத்தின் ரிலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே காவலன், தலைவா என்று அரசியல் அழுத்தங்களுக்கு ஆளான விஜய் இப்போது நேரடியாகவே உதயநிதியால்  அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார். இதை விஜய்யின் வாய்ஸாக  வாரிசு படத்தின்  தயாரிப்பாளர் தில் ராஜூவே தெலுங்கு பேட்டியொன்றில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

“தமிழ்நாட்டில் அஜீத்தை விட விஜய்  நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை, புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால் அஜீத்தின் துணிவை வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கீடு செய்துவிட்டு வாரிசுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள்.

இது பிசினஸ். யாருக்கு லாபம் அதிகம் வருகிறதோ அவர்களுக்கே அதிக தியேட்டர்கள் தரப்பட வேண்டும். துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும்” என்று விஜய் பட தயாரிப்பாளர் தில் ராஜூ வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இது பிசினஸ் என்று தயாரிப்பாளர் சொன்னாலும்… இது முழுக்க முழுக்க அரசியல் என்பதுதான் விஜய் சொல்லும் உண்மை. அதனால்தான் இதில் தான் வெளிப்படையாக பேசாமல் தன்னுடைய தயாரிப்பாளரை பேச வைத்திருக்கிறார் விஜய்.

ரெட் ஜெயன்ட்- விஜய் ஆராய்ச்சி 

இந்த நிலையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில்… அவரது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தொடர்புகள் பற்றியும் விஜய் தரப்பில் ஆராயத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி  அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்திருப்பவர் இன்னொரு நிறுவனத்தில் ஊழியராகவோ பங்குதாரராகவோ உரிமையாளராகவோ இருக்கக் கூடாது.  

ஆபீஸ் ஆஃப் பிராஃபிட் என்ற அடிப்படையில் அரசு சம்பளம் வாங்குபவர் இன்னொரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ஆதாயம் பெற்றால், தனது அமைச்சக அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தனியார் நிறுவனத்துக்கு அவர் பாரபட்சமாக உதவி செய்வதற்கு வாய்ப்புண்டு என்பதால் எந்த நிறுவனத்திலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இது உதயநிதிக்கும் பொருந்தும். எனவே ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் இருந்து உதயநிதி தன்னை முற்றிலும் விடுவித்துக் கொண்டாரா என்பது பற்றியும் விசாரித்து வருகிறார் விஜய்.

triangle politics in tamilnadu

இதற்கு அச்சாரமிடும் வகையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் அரசியல் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.
மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில், ’எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே’ என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கமலாலயத்தில் விஜய் 

இதற்கிடையே கடந்த வாரம் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட தலைவர் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திமுக-அதிமுக பற்றியெல்லாம் கடுமையாக பேசிவிட்டு, ‘விஜய் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லாமே மாறிவிடும்’ என்றும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே  விஜய்க்கும் பாஜகவுக்கும் கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன.

triangle politics in tamilnadu

பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா  ஜோசப் விஜய் என்று தான் விஜய்யை அழைப்பார். இந்த  நிலையில் கமலாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் வரை விஜய் பெயர் அடிபட்டுள்ளது. ஒருவேளை ரஜினியை விட்டு விஜய்யை பிடிக்க பாஜக முயற்சித்தாலும் முயற்சிக்கலாம். ஆனால் அதற்கு விஜய் பிடிகொடுப்பாரா என்பது பலத்த கேள்விக்குறி.

விஜய் ஏற்கனவே தனது மக்கள் இயக்கத்தினரை அரசியலுக்கு தயார் செய்து அவர்களில் சிலரை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற வைத்திருக்கிறார். இந்நிலையில் அனேகமாக அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலின்போது விஜய் 50 வயதை நெருங்குவார். அப்போது ஆக்டிவ்வான தீவிர அரசியலில் இறங்குவதற்கு அவருக்கு சரியான நேரமாக இருக்கும் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

அப்படி நடந்தால் உதயநிதி – விஜய் – அண்ணாமலை என்று தமிழகம் இளைஞர்களின் முக்கோண அரசியலைக் காண வேண்டியிருக்கும்!

-வேந்தன்

மதுரை மீனாட்சி அம்மன் சப்பர திருவிழா கோலாகலம்!

ஆளுநருக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *