தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிமுகம் செய்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார் விஜய்.
மேலும் தனது கட்சியின் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நடத்தவிருக்கிறார். மாநாட்டிற்கு முன் தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் , கட்சிக்கொடி அறிமுகம் பற்றி நடிகர் விஜய் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் ஆகஸ்ட் 22, 2024.
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகமான சென்னை பனையூரில் காலை 9.15 மணிக்கு அறிமுகப்படுத்தி, கொடிப் பாடலை வெளியிட்டு கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும் “ என்று தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“வறுமையால் திறமை முடங்கிவிடக்கூடாது” : மாணவிக்கு உதவ முன்வந்த அமைச்சர்!
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… மக்களே அலர்ட்!