‘கீச்’ குரலில் விஜய் மாநாட்டை வென்றெடுத்த தொகுப்பாளினி: யார் இவர்?

அரசியல் தமிழகம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடந்து முடிந்தது.

பாம்பை பார்த்தால் பயமில்லை, ஏ டீம், பி டீஎம் என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலடி, திமுகவை கடுமையாக விமர்சித்தது, பாண்டிய மன்னனோடு ஒப்பிட்டு பேசிய குட்டி ஸ்டோரி என விஜய்யின் 45 நிமிட உரை பலரது கவனத்தையும் ஈர்த்ததோடு, அரசியல் மேடைகளில் விவாத பொருளாகி வருகிறது.

அதேபோன்று மாநாட்டில் கவனம் ஈர்த்தவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி.

உச்ச நடிகரின் கட்சி மாநாடு என்பதால் பிரபலமானவர் தொகுத்து வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநாட்டில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் யார் என்றே பலருக்கும் தெரியாது.

‘தளபதி இதோ வந்து விட்டார்… அதோ வந்துவிட்டார்… ராஜ நடையுடன், இதோ சிங்கம் தன் குகையை நோக்கி வருகிறது’ என உணர்ச்சி பொங்க அந்த பெண் கத்தி கத்தி பேசியதும் சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆகின.

யார் இந்த பெண் என்று பலரும் தேட ஆரம்பித்த நிலையில், சிலர் ட்ரோலும் செய்தனர். இன்னும் பெட்டராக பேசி இருக்கலாம் என்று சிலர் அறிவுரையும் வழங்கினர்.

சரி… யார் இந்த தொகுப்பாளினி?

இவரது பெயர் துர்கா தேவி. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்தவர். தற்போது தனது கணவருடன் மதுரையில் வசித்து வருகிறார்.

பிஇ, எம்இ படித்துள்ள துர்கா தேவி சென்னையில் சில வருடங்கள் ஐடி கம்பெனியில் வேலை செய்தார். அந்த காலகட்டத்தில் நியூஸ் சேனல்களில் நியூஸ் ரீடராக பேசுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய துர்கா தேவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் வேலைக்குச் செல்லாமல் விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு விஜய் மாநாட்டில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்னம்பலம் சார்பாக துர்கா தேவியிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

“விஜய் ரசிகராகவும், தவெகவில் பொறுப்பிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் என்னை தேர்வு செய்தார்கள். என்னுடைய குரலை சோதனை செய்து, தமிழ் உச்சரிப்பை பார்த்து அதன் பிறகே இறுதி செய்தனர்.

எனது அண்ணன் தவெகவில் இருப்பதால், அவர் மூலம் நானும் கட்சியில் இணைந்தேன். விருதுநகர் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளராக இருக்கிறேன்.

கல்லூரி படிப்பை தொடங்கியது முதல் எனக்கு வரும் பாக்கெட்மணியை வைத்து விஜய் பிறந்தநாள் அன்று ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு வழங்குவது, மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்குவது போன்ற சின்ன சின்ன விஷயங்களை செய்து வந்தேன்.

நான் அடிப்படையில் ஒரு கவிஞர். பள்ளி படிப்பு படிக்கும் போதே 2012ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கையில், கவிதை போட்டியில் மாநில அளவில் முதல் பரிசை வாங்கியிருக்கிறேன்.

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது ‘கலைஞர் 90’ புத்தகத்தில் என்னுடைய கவிதை இடம் பெற்றிருக்கிறது.

மாமதுரை கவிஞர் பேரவையில் இருந்து கவிபாரதி மற்றும் கவிமணி முரசு ஆகிய இரண்டு விருதுகளை வாங்கியிருக்கிறேன்.

மதுரை, விருதுநகரில் நடக்கும் தனியார் நிகழ்சிகளில் கவிதை வாசிக்க என்னை அழைப்பார்கள். 2017ல் மதுரையில் கவிஞர் சிநேகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கவிதை வாசித்த என்னை அழைத்து அவர் பாராட்டினார்.

2021ல் நான் கர்ப்பமாக இருந்தபோது, விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், கவிதை வாசித்தேன். இதை பாராட்டி விருதுநகர் ஆட்சியரே அந்த கவிதை வீடியோவை வெளியிட்டிருந்தார்.

கல்லூரியில் இருந்தே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வந்த சாதாரண பெண்ணான எனக்கு விஜய் வாய்ப்பு கொடுத்ததை மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கிறேன்.

மாநாட்டு மேடையில் விஜய் ஏறியதும் எனக்கு ஹாய் சொன்னார். அப்போதுதான் அவரை நான் முதன் முதலில் பார்த்தேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உணர்ச்சி பொங்க பேசினேன். என்னுடைய மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி பேசினேன்.

மாநாடு முடிந்த பிறகு, விஜய் வேறொரு பக்கம் சுற்றி போக போனார். ஆனால், என்னை பார்த்ததும் என்னிடம் வந்து, “என் கையை பிடிச்சு…ரொம்ப நல்லா பேசுனீங்கம்மா”னு பாராட்டினாரு.

எனக்கு சினிமா ஃப்ரோபைல் எதுவும் கிடையாது. விஜய்க்கு எத்தனையோ பேரை தெரியும். அவர் நினைத்திருந்தால் பிரபலமான ஒருவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்க முடியும்.

ஆனால், கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்த எனக்கு வாய்ப்பளித்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்ற கொள்கையை இந்த இடத்தில் கூட நிரூபித்துவிட்டார். சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்றார்.

அவர் மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, “அதையெல்லாம் பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. என்னுடைய குரல் மற்றும் நிறத்தை வைத்து விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. திறமையைதான் பார்க்க வேண்டும். கலராக இருந்தாலோ, பின்புலம் இருந்தாலோதான் தான் கேட்பீர்களா?

விஜய் ரசிகர்களின், தொண்டர்களின் அத்தனை ஆர்ப்பரிப்பு குரல்களையும் தாண்டி எனது குரல் ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கத்தி பேசினேன்” என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

மேலும், மாநாட்டில் இருந்து மாலை 6.30க்கே கிளம்பிவிட்டதாகவும், ஆனால், விக்கிரவாண்டியை தாண்டவே 6 மணி நேரத்திற்கு மேல் ஆனது, இரவு ஒரு மணிக்கு பிறகுதான் அந்த பகுதியில் இருந்து கடந்து செல்ல முடிந்தது என்றும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் துர்கா தேவி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தீபாவளி ஆஃபரா? பொங்கல் ஆஃபரா? – அப்டேட் குமாரு

தவெக நிர்வாகிகள் மரணம்… விஜய் இரங்கல்!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *