வைஃபை ஆன் செய்ததும் விஜய் நடத்திய மாநாட்டின் பிரம்மாண்ட கூட்டப் படங்கள், வீடியோக்கள், மாநாடு தொடர்பான விவாத வீடியோக்களும் இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அவற்றைப் பார்த்துக்கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது
“அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் தேசிய அரசியல் வட்டாரத்திலும் முக்கியமான பேசுப்பொருளாக மாறி இருக்கிறது.
பல்வேறு ஆங்கில ஊடகங்களும் விஜய்யின் மாநாட்டு கூட்டத்தையும் அவர் திமுக பாஜக ஆகியவற்றுக்கு எதிராக பேசியது பற்றியும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், மாநாடு முடிந்து விட்டாலும்… இந்த மாநாடு தொடர்பாக மாநில அரசின் உளவுத்துறையும் மத்திய அரசின் உளவுத்துறையும் முக்கியமான அனலைஸ் ரிப்போர்ட்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
மாநாட்டுக்கு வந்த கூட்டம் மொத்தம் எத்தனை லட்சங்கள்? மாநாட்டுக்கு வந்த வாகனங்கள் எத்தனை? மாநாட்டு வாகனங்கள் வாடகை வாகனங்களா சொந்த வாகனங்களா?
மாநாட்டுக்கு வந்த வாகனங்களின் பதிவு எண்கள் அடிப்படையில் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து அதிகமாக வாகனங்கள் வந்திருக்கின்றன? தமிழ்நாட்டில் வட தமிழ்நாடு, தென்தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு போன்ற பகுதிகளில் எந்தப் பகுதியில் இருந்து அதிக வாகனங்கள் விஜய் மாநாட்டுக்கு வந்திருக்கின்றன?
எந்தெந்த பகுதிகளில் அதிகமான வாகனங்கள் மாநாட்டுக்கு வந்திருக்கின்றதோ அந்தந்த பகுதிகளின் பெரும்பான்மை சமுதாயத்தினர் மாநாட்டுக்கு வந்திருக்கிறார்களா? இப்படி பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் மாநில, மத்திய அரசுகளின் உளவுத்துறையினர் அறிக்கை தயாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மின்னம்பலம் நடத்திய விசாரணையில் சில பிரத்தியேக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்காக விக்கிரவாண்டி வி.சாலை மைதானத்தில் 50 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டன.
மைதானத்தை நூறு பாக்ஸ்களாக பிரித்து அதாவது 100 பகுதிகளாக பிரித்து இடைவெளியோடு அமைத்தனர்.
இவற்றில் 80-க்கும் மேற்பட்ட பாக்ஸ்களில் தலா அறுநூறு நாற்காலிகள் வீதம் போடப்பட்டன. இதன்படி பார்த்தால் சுமார் 50 ஆயிரத்து 400 நாற்காலிகள் போடப்பட்டன.
பின்பகுதியில் மீதி உள்ள அனைத்து பாக்ஸ்களிலும் நாற்காலிகள் போடப்படாமல் வெறுமனே விடப்பட்டன. காரணம் மாநாட்டு மைதானத்திற்குள் நேரம் ஆக ஆக வருபவர்கள் நிற்பதற்காக அவை விடப்பட்டிருந்தன.
தொண்டர்கள் நிற்கும் பகுதிக்கும் நாற்காலி போடப்பட்டிருக்கிற பகுதிக்கும் இடையில் ஒரு எஸ்பி அந்தஸ்துள்ள போலீஸ் அதிகாரி தலைமையில் 100 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நிற்கும் தொண்டர்கள் நாற்காலிகள் அமர்ந்திருக்கும் பகுதிகளுக்குள் வராமல் பார்த்துக் கொண்டனர்.
மாலை நேரம் ஆக ஆக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கூட்டம் மைதானத்திற்குள் அதிகமாக வரத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் மைதானத்திற்கு பின்புறம் பக்கவாட்டுகளில் நிற்பவர்கள் விஜய் பேசத் தொடங்கியதும் முன்னோக்கி நகர்ந்தார்கள்.
இந்த நிலையில், விஜய் நடந்து வந்த நடைமேடை, எல்இடி திரைகள் என சகட்டுமேனிக்கு தொண்டர்கள் எகிறினார்கள். இதனால் மேடைக்கு முன்பு இருந்த பகுதிகள் வரை கூட்டம் நெருக்கியது. கிட்டத்தட்ட இரண்டு நாற்காலிக்கு மூன்று பேர்கள் என்ற நிலையில் நின்று இருந்தார்கள்.
இந்த நிலையில், விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது மாநாட்டு மைதானத்தில் உட்கார்ந்து இருந்தவர்கள் நின்று கொண்டிருந்தவர்கள், மைதானத்துக்குள் நகர்ந்து கொண்டிருந்தவர்கள் என மொத்த கூட்டம் ஒன்றரை லட்சம் பேர்.
மாநாட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு நகர்ந்தவர்கள், உள்ளே வர முடியாமல் இரண்டு பக்கங்களிலும் சுமார் நான்கு கிலோ மீட்டர்கள் வரை திரண்டு இருந்தவர்கள் என மொத்தம் மாநாட்டுக்காக மூன்று லட்சம் பேர் வந்திருக்கிறார்கள் என்பது தான் மாநில அரசு மேலிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் போலீஸ் நோட்.
மொத்தம் மூன்று லட்சம் பேர் என்பது பிரம்மாண்டமான கூட்டம். வெளியே இருந்து பார்ப்பவர்கள் இந்த வியப்போடு விட்டுவிடுவார்கள்.
ஆனால், இந்த மூன்று லட்சம் பேர் கொண்ட கூட்டம் விஜய்க்காக தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து வந்தது, எப்படிப்பட்ட வாகனங்களில் வந்தது என்ற கேள்விகளுக்கு பதில் தேடினால் கிடைக்கும் தரவுகளில் இருந்து, விஜய்யின் ஏரியா எது என்ற உண்மையும் ஓரளவுக்கு தெளிவுபட வாய்ப்பு இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்காக 16 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி வந்திருக்கின்றன என்பது போலீஸ் இறுதி செய்திருக்கும் கணக்கு.
மாநாட்டு மைதானத்தை ஒட்டிய ஐந்து கார் பார்க்கிங் இடங்களில் பஸ், வேன், கார் என மொத்தம் பத்தாயிரம் வாகனங்கள் நின்றன.
மாநாட்டு வட்டாரத்தை நெருங்க முடியாமல் சாலையோரங்களிலும் சற்று சில கிலோ மீட்டர்கள் தூரம் தள்ளியும் நிறுத்தப்பட்ட மொத்த வாகனங்கள் 16,000 வாகனங்கள்.
இவற்றில் 5% தான் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது விஜய் மாநாட்டுக்கு வந்தவர்களில் 95 சதவீதம் பேர் அவரவர் ஊர்களில் இருந்து பணம் வசூல் செய்து வேன் மற்றும் பஸ்களை அமர்த்தி வந்துள்ளனர். மீதம் 5% பேர்தான் கார்களில் வந்திருக்கிறார்கள். அந்த கார்களும் எண்பது சதவீதம் வாடகை கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் விஜய் மாநாட்டுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விஷயம் புலப்படுகிறது.
இது மட்டுமல்ல வந்தவர்களில் 90% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் 70% பேரின் பெற்றோர் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது திமுகவின் பற்பல நிலைகளில் நிர்வாகிகளாக இருக்கும் நடுத்தர மற்றும் நடுத்தர வயதை கடந்த அவர்களின் பிள்ளைகள்தான் விஜய்யை நோக்கி மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பது அரசு மேல் இடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிற முக்கியமான செய்தி.
சரி எந்தெந்த மாவட்டங்களில் இருந்து விஜய் மாநாட்டுக்கு தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருக்கிறார்கள்?
பார்க்கிங் செய்யப்பட்டிருந்த வண்டிகளின் பதிவு எண்கள், விக்கிரவாண்டிக்கு இரண்டு திசைகளிலும் மாநாட்டுக்காக வந்து சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளின் பதிவு எண்கள் இவற்றையெல்லாம் வைத்து ஆய்வு செய்ததில்…
விஜய்க்கு காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு, சென்னை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை இந்த மாவட்டங்களில் இருந்து மிக அதிகமான தொண்டர்கள் வந்திருப்பது தெரிய வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்திருக்கிறார்கள்.
அடுத்ததாக மத்திய மாவட்டங்களான திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு தொண்டர்கள் வந்திருக்கிறார்கள்.
இதற்குப் பிறகு தென்மாவட்டங்களில் இருந்து விக்கிரவாண்டி மாநாட்டுக்கு தொண்டர்கள் வந்திருக்கிறார்கள்.
இதில் இன்னொரு விஷயமும் குறிப்பிட வேண்டி இருக்கிறது… மாநாடு வட தமிழகத்தில் நடைபெறுவதால் வடதமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் இருந்து தான் தொண்டர்கள் அதிகமாக டார்கெட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மாவட்ட அடிப்படையிலான இந்த விவரங்களை வைத்துப் பார்த்தால் வடமாவட்டங்களில் இருக்கும் தலித் மற்றும் வன்னியர் சமுதாய இளைஞர்கள் அதிகமாக மாநாட்டுக்கு திரண்டு இருக்கிறார்கள்.
கோவை வட்டாரத்தில் இருந்து கொங்கு சமுதாய இளைஞர்களும் திரண்டு உள்ளனர். தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பர்னாந்து மீனவர் சமுதாய பெண்களும் ஆண்களும் குடும்பம் குடும்பமாக 12 மணி நேரத்துக்கு மேல் பயணித்து வந்திருப்பதையும் அறிய முடிகிறது.
இந்த நிலையில், தான் விஜய்க்கு திரண்ட கூட்டம் மூன்று லட்சம் என்றால் அதன் குறுக்கு வெட்டு தோற்றத்தில் இத்தனை செய்திகள் அடங்கியிருக்கின்றன” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெப்ப அலை தாக்கம்… மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
14 மாதங்களுக்கு பிறகு…. கடற்கரை – வேளச்சேரி ரயில் சேவை இயக்கம்!