தவெக மாநாடு : சாரை சாரையாக வரும் கூட்டம் : கடும் போக்குவரத்து நெரிசல்!

Published On:

| By Kavi

விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டுக்கு சாரை சாரையாக மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

வி.சாலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 4கிமீ தொலைவில் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்து விட்டு விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் நடந்து வந்துகொண்டிருக்கின்றனர்.

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் தவெக சார்பில் தனி வழித்தடம் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து 4 கி.மீட்டர் தூரத்துக்கு தனியாக ஒருவழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் இந்த வழியில் கட்டணமின்றி செல்கின்றனர். உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச் சாவடிகளிலும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

மாநாட்டுத் திடலில் 70000 இருக்கைகள் போடப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அவ்விடம் முழுவதும் நிரம்பி வழிவதை காணமுடிகிறது.

நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் உள்ளதால் நாற்காலிகளை தலையில் எடுத்து வைத்துக்கொண்டு தொண்டர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

இதுவரை 80 பேர் வரை மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். சிலருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாகனங்கள் வி.சாலையை நோக்கி படையெடுத்துள்ளதால் தற்போது விக்கிரவாண்டி டோல்கேட் பகுதிகளில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாநாட்டில் தடுப்புகளை மீறி விஐபி இருக்கைகள், பெண்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்த தொண்டர்களை வெளியேற்றியதால்  பவுன்சர்களுக்கும் தொண்டர்களுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநாட்டு திடலில் வைக்கப்பட்டிருந்த  பல டேங்க்குகளிலும் தண்ணீர் தீர்ந்துள்ளது. இதனால் மீண்டும் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“வெளிச்சம் போட்டுக் காட்டிய விஜய்” : ஆதவ் அர்ஜுனா வரவேற்பு!

விஜய் மாநாட்டுக்கு புறப்பட்ட இளைஞர் விபத்தில் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel