டிஜிட்டல் திண்ணை: விஜய்யுடன் ஒரே மேடையா? திருமா பற்றி ஸ்டாலின் ரியாக் ஷன்!  நள்ளிரவு அறிக்கையின் பின்னணி!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் விசிக தலைவர் திருமாவளவனின், ‘சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம்’ என்ற நீண்ட அறிக்கை இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதை முழுதும் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“விசிக தலைவர் திருமாவளவன் நவம்பர் 8  ஆம் தேதி முன்னிரவு 1.20 மணிக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்திலும், முன்னிரவு 2.20 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்திலும் அந்த நீண்ட விளக்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில் திமுக கூட்டணியை உடைப்பதற்காக விசிகவை கருவியாக பயன்படுத்தி  சதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். குறிப்பாக   அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யோடு மேடையேறும் தகவல் பற்றித்தான்  நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்னும் தொகுப்பினை ‘விகடன் பதிப்பகமும்  வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்னும் தேர்தல் வியூக நிறுவனமும்  இணைந்து வெளியிடவுள்ளன. வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (விஓசி) என்பது நமது கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் அவர்களின் நிறுவனமாகும்.

1 நபர் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

இந்த நூல் கடந்த ஏப்ரலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வெளியிடுவதாக தான் பதிப்பகத்தார் திட்டமிட்டனர். அப்போதே இந்த நூலின் வெளியீட்டு விழா குறித்தும் பேசினர். அதில் நானும் பங்கேற்க வேண்டுமென்றும் கோரினர். அப்போதே நான் அதில் பங்கேற்க இசைவளித்துவிட்டேன்.

அந்நிகழ்வில் பங்கேறகுமாறு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி,  இந்து ராம், ஆனந்த் டெல்டும்டே போன்றோரை அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அப்போது தெரிவித்தனர்.  அதன்படி, ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் தோழர் கலைச்செல்வன் அவர்கள், விகடன் பதிப்பகத்தின் பொது மேலாளர்  திரு.அப்பாஸ்அலி அவர்களின் கையொப்பமிட்ட அழைப்புக் கடிதம் ஒன்றை அக்டோபர்-10 அன்று எனக்கு அளித்தார். அப்போது நடிகர் விஜய் அவர்களும் நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்கவிருக்கிறார் என்பதை கூறினார். அப்போதைய சூழலில் நடிகர் விஜய் அவர்களின் கட்சி மாநாடு (அக்- 27) நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் அவர்களின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், கட்சி சார்பற்ற விகடன் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதும், நம்மீது சந்தேகத்தை எழுப்பி நமது நம்பகத்தன்மையை நொறுக்கிட முயற்சிப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார் திருமாவளவன்.

மேலும்,  ‘மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல்வெளியீட்டு விழாவில்  பங்பேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்?  இவ்வாறு நம்மைப் பற்றி இழித்தும் குறைத்தும் மதிப்பீடு செய்வதற்கு அவர்கள் கையாளும் அளவுகோள் தான் என்ன? ஆதாயம் கருதி அங்குமிங்கும் அல்லாடும் அற்ப அரசியல் செய்யும் சராசரி பேர்வழிகள் என்று நம்மைக் கருதுகிறார்களா? ’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image

விஜய்யுடன் மேடையை திருமா பகிர்ந்துகொள்கிறார் என்ற தகவல் அறிந்ததுமே திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது. விஜய் மாநாட்டில் திமுகவை கடுமையாக சாடிய நிலையில்… முதல்வர் ஸ்டாலின் ஒரு வாரம் கழித்து கொளத்தூர் விழாவில் விஜய்க்கு கடுமையாக பதில் கொடுத்தார்.  ’புதுசா கட்சி தொடங்குறவன்லாம் திமுகவை அழிக்கணும்னு நினைக்கிறாங்க’ என  விஜய்யை  பெயர் குறிப்பிடாமல் பேசிய ஸ்டாலின், பின்  வாழ்க வசவாளர்கள் என்றும் குறிப்பிட்டார். அதன் பின் துணை முதலமைச்சர் உதயநிதியும் தான் பங்கேற்ற விழுப்புரம், தஞ்சாவூர் நிகழ்ச்சிகளிலும் விஜய்யை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். ஆலமரத்தை பிளேடுகளால் சாய்க்க முடியுமா என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில்தான் ஏற்கனவே திமுகவுக்கு உறுத்தலாக இருக்கும் விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் நடக்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில்,  விஜய்யுடன் திருமாவளவன் மேடையைப் பகிர்ந்துகொள்வதை திமுக தலைமை  துளியும் விரும்பவில்லை.

முதல்வர் ஸ்டாலின் சீனியர் அமைச்சர்களிடம், ‘கூட்டணியில  இத்தனை கட்சிகள் இருக்குறாங்க. ஆனா விசிகவை மையமா வச்சு மட்டும்தான் சர்ச்சைகள் வந்துகிட்டிருக்கு. என்ன நினைக்கிறாங்க அவங்க?  திமுகன்னாலே சுயமரியாதைனுதானே அர்த்தம். நம்மளோட சுயமரியாதையையே சீண்டிப் பாக்குறாங்களா?’ என்று வருத்தமும் கோபமும் கலந்து கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளோடு திமுக தலைமை சார்பில் தொடர்பிலே இருக்கக் கூடிய அமைச்சர் எ.வ.வேலு விசிக தலைவர் திருமாவளவனோடு பேசியிருக்கிறார்.

‘நீங்க விஜய்யோடு  ஒரே மேடையில் ஏறுவதாக இருந்தால்… அந்த காட்சியை பார்த்து உங்க கட்சித் தொண்டர்களும் குழம்பிடுவாங்க… திமுக தொண்டர்களும் குழம்பிடுவாங்க.  கூடவே ஊடகத்தினருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் தீனி போட்டது மாதிரி ஆகிடும்’ என்றதோடு முதல்வரின் கருத்துகளையும் தனக்கே உரிய பாணியில் திருமாவிடம் சொல்லியிருக்கிறார்,

மேலும் விசிகவின் ;பொதுச் செயலாளர் ரவிக்குமார்,  துணைப் பொதுச் செயலாளர்கள்  வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி. ஆளூர் ஷாநவாஸ் போன்றோரும்  திருமாவிடம் கூட்டணி சர்ச்சைகளில் விசிக தொடர்ந்து சிக்கி வருவது பற்றி தங்களது கவலைகளை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நெருக்கடியில்தான் தூக்கம் வராமல் நவம்பர் 7 ஆம் தேதி இரவு நிகழ்ச்சிகள் முடிந்ததும் இந்த நீண்ட அறிக்கையை எழுதிய திருமாவளவன், நவம்பர் 8 ஆம் தேதி முன்னிரவிலேயே அதை வெளியிட்டிருக்கிறார்.  அதிலும் கூட விஜய்யுடன் மேடையை பகிர்ந்துகொள்வதால்,நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இது திமுகவை மேலும் சூடேற்றியுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

லிங்க் இருந்தா அனுப்புங்க : அப்டேட் குமாரு

முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் மரணம்!

+1
0
+1
3
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *