புதுக்கட்சி:  திமுக, அதிமுக ’பைலா’ ஆய்வு செய்யும் விஜய்

அரசியல்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவது பற்றி பல்வேறு தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சி தொடங்குவதற்கு அச்சாரமாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அம்பேத்கர் தொடங்கி பல்வேறு ஆளுமைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில்  முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை சென்னைக்கு அழைத்து, பரிசு வழங்க இருக்கிறார் விஜய். இதற்கான பிரம்மாண்ட கூட்டம் ஜூன் 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் நடைபெற இருக்கிறது. 1404 மாணவர்கள் பரிசு பெற வரும் நிலையில் அவர்களுடைய தாய் தந்தையரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி வெளிப்படையான அரசியல் முயற்சிகளை ஒரு பக்கம் விஜய் முடுக்கி விட்டுக் கொண்டிருக்க… இன்னொரு பக்கம் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அடிப்படை வேலைகளையும் உள்ளுக்குள் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார் விஜய்.

கடந்த சில மாதங்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளையும் அரசியல் ஆய்வாளர்களையும் தனித்தனியாக விஜய் சந்தித்து வருகிறார். 

அவர்களிடம் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் நிலை பற்றியும் நிர்வாக ரீதியாக தமிழ்நாட்டில் நிலவி வருகிற போக்கு பற்றியும் பேசி வருகிறார் விஜய்.

இது மட்டுமல்லாமல் விஜய் அமைத்திருக்கிற குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள்… கடந்த 1957 சட்டமன்றத் தேர்தல் முதல் 2021 சட்டமன்றத் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களின் களம், போக்கு, ரிசல்ட் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

60கள், 80 கள்,  2000 ஆண்டின் பிற்பகுதி என தமிழ்நாட்டு அரசியலை மூன்றாகப் பிரித்து… இந்த காலகட்டங்களில் ஏற்பட்டு வந்த சமூக அரசியல் மாற்றங்களை பற்றி விஜய்க்கு அறிக்கை அளிக்க இருக்கிறார்கள் அவர்கள். மேலும் மாநிலம் தழுவிய  அரசியல் தலைவர்கள், அந்தந்த மண்டலங்களைச் சார்ந்த அரசியல் தலைவர்கள், பல்வேறு சமுதாயத் தலைவர்கள் ஆகியோரை பற்றி தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு ஒரு பவர் பாயிண்ட் ப்ரசென்டேஷன் தயாரித்திருக்கிறார்கள். அதை விஜய்க்கு விரைவில் திரையிட இருக்கிறார்கள்.

இந்த பணிகளின் இன்னொரு முக்கிய அம்சமாக விஜய் துவங்க இருக்கும் கட்சிக்கான சட்டத்திட்டங்கள் பற்றிய ஆலோசனையும் நடந்து வருகிறது.

1949 இல் துவங்கப்பட்ட  மாநில கட்சி திமுக. திமுகவுக்கான கட்டமைப்பு மற்றும் நிர்வாக சட்டதிட்ட விதிகளை பேரறிஞர் அண்ணா பல்வேறு நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்து வகுத்தார். 

1972ல் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் கலைஞரை எதிர்த்து அதிமுக என்ற தனி கட்சி தொடங்கினார். திமுகவும் அதிமுகவும் நேர் எதிர் துருவங்கள் என்ற நிலையில் செயல்பட்டாலும்…  அதிமுகவை தொடங்கிய போது திமுகவின் சட்ட திட்ட விதிகளின் பல அம்சங்களை அதிமுகவுக்கும் பயன்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர்.

1982ல் என்.டி. ராமராவ் ஆந்திராவிலே தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட திட்டங்கள் திமுகவின் சட்டதிட்ட விதிகளை அடியொற்றியே அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் இப்போது விஜய் தொடங்க இருக்கும் கட்சிக்கான சட்ட திட்ட விதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக திமுக அதிமுக ஆகிய தமிழ்நாட்டின் இரண்டு வெற்றிகரமான கட்சிகளின் சட்ட திட்ட விதிகளை வைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள் விஜய்யின் குழுவினர்.

திமுக,  அதிமுக ஆகிய கட்சிகளின் உட்கட்டமைப்பு, நிர்வாக படிநிலை ஆகியவற்றை தழுவி விஜய்யின் புதிய கட்சிக்கான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

திமுக, அதிமுகவுக்கு மாற்றான கட்சி என்று சொல்லிக் கொண்டு உருவாக்கப்படும் கட்சிகளின் சட்ட திட்டங்களை கூட திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே  நிர்ணயிக்கின்றன என்பது அரசியல் சுவாரஸ்யத்தின் உச்சம்! 

வேந்தன் 

“திருமாவின் வாழ்த்து ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகிறது” – வைகோ

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு: மீண்டும் ஒத்திவைப்பு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *