வேங்கை வயல் : சிபிஐ வேண்டாம்; ஆனால்… விஜய்யின் புது கோரிக்கை!

Published On:

| By christopher

vengai vayal vijay

வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், காவலர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தான் குற்றசெயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தர்களையே குற்றவாளிகள் என கூறியுள்ளதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

சிபிஐ விசாரணை கால தாமதத்தை ஏற்படுத்தும்!

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜனவரி 26) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.

வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.

வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share