நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கான ஆவண ரீதியான ஏற்பாடுகளையும் வேகமாக செய்து வருகிறார். Vijay registered party name
கடந்த ஜனவரி 25ஆம் தேதி தமிழுக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளில் அதிகாலையிலேயே தனது பனையூர் அலுவலகத்திற்கு சுமார் 150 நிர்வாகிகளை வரவழைத்தார் விஜய்.
அவர்களிடம் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான ஆவணங்களில் கையொப்பம் பெற்றார்.
இதுகுறித்து மின்னம்பலத்தில், ‘கழக தலைவர் விஜய்… அதிகாலை கூட்ட ரகசியம்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதாவது விஜய் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் கழகம் என்ற விகுதியில் தான் முடியும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
நிர்வாகிகளிடம் கட்சி பதிவதற்கான ஆவணங்களில் கையெழுத்து பெற்ற சில நாட்களில் விஜய்யின் டீம் டெல்லி புறப்பட்டு சென்றது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்தே விஜய் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் அவருக்கு இல்லை. ஆனாலும் எதற்காக மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக கில்லி வேகம் காட்டி வருகிறார் விஜய்?
இந்த கேள்விக்கு விடை தேடும்போது இதற்குக் காரணம் டெல்லிதான் என்று தெரியவந்தது.
”தற்போதைய இந்திய அளவிலான அரசியல் சூழ்நிலையில் மீண்டும் மோடி பிரதமராக வருவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன. இந்தியா கூட்டணியில் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
ஒருவேளை மோடி மீண்டும் பிரதமராக வந்துவிட்டால் இனி தேர்தலே நடக்காது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சொன்னதை லேசில் விட்டுவிட முடியாது.
ஒருவேளை மீண்டும் பிரதமராக மோடி வரும் பட்சத்தில் புதிய கட்சிகள் குறிப்பாக மாநில கட்சிகள் பதிவு செய்வதற்கு கற்பனை செய்து கூட பார்க்காத அளவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம்.
ஒரு கட்சி ஆட்சி முறையை நோக்கி இந்தியா படிப்படியாக இழுத்துச் செல்லப்படலாம். இப்படிப்பட்ட அபாயங்கள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று மறுத்துவிடவும் முடியாது.
அப்படி ஒரு சூழலில் கட்சி பதிவு செய்யவே முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற எச்சரிக்கை உணர்வோடுதான், மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியை பதிவு செய்துவிடலாம் என விஜய்க்கு அவரது ஆலோசகர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அந்த ஆலோசனைக்குள் இருக்கும் அர்த்தத்தை உணர்ந்து விஜய்யும் உடனடியாக ஒ.கே. சொல்லி கட்சிப் பதிவு வேலைகளைத் தொடங்கிவிட்டார்” என்கிறார்கள் விஜய் வட்டாரத்தில்.
விஜய்யின் கில்லி வேகத்துக்குப் பின்னால் டெல்லி இருப்பதன் பின்னணி இதுதான்!
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிராக திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்!
Vijay registered party name