‘போஸ்டர் அடி’ அண்ணன் ரெடி…கப்-பை கைப்பற்றத் தயாராகும் ‘தளபதி’ விஜய்!

அரசியல்

ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் தமிழக அரசியலும், கோடம்பாக்கமும் தான் என நாம் தாராளமாக சொல்லலாம். கலைஞர் கருணாநிதி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா என மூன்று முதல்வர்கள் அடுத்தடுத்து கோடம்பாக்கத்தில் இருந்து தமிழக முதல்வராக கோட்டையில் கொடி ஏற்றினார்கள். இதேபோல அறிஞர் அண்ணாவும் தன்னுடைய கதைகள் , வசனங்கள் மூலம் கோடம்பாக்கத்துடன் தொடர்பு கொண்டவராகவே இருந்துள்ளார்.

இவர்கள் வரிசையில் குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலில் தடம் பதித்து எதிர்க்கட்சி தலைவராக மாறிய கேப்டன் விஜயகாந்தும் கோலிவுட் வழியாகவே அரசியலுக்கு வந்தார்.

இதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக உள்ள உலகநாயகன் கமல்ஹாசன், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என தமிழக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடைசி வரை ரசிகர்களின் பல்ஸ் பிடித்துப்பார்த்து பின்னர் ‘சீ சீ இந்த பழம் புளிக்கும்’ என ஒதுங்கி விட்டார்.

இந்த வரிசையில் நீண்ட நாட்களாக தமிழக அரசியலில் எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய் ஒருவழியாக நேற்றைய லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இளைய தளபதியாக இருந்து தற்போது தளபதியாக மாறியிருக்கும் விஜய், இதேபோல ஆரம்ப காலத்தில் வெறும் ரசிகர் மன்றங்களாக இருந்தவற்றை ஒருங்கிணைத்து விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.

தங்களுடைய ஆதர்ச நாயகன் மாறியது போல விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளும் விஜய் படங்களின் கட் அவுட்டுகளுக்கு ‘ஆவின்’ பாலூற்றி குளிப்பாட்டுவதை விட்டுவிட்டு நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்வது, பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுப்பது என சந்திரமுகி படத்தில் கங்கா ‘சந்திரமுகியாக’ மாறியது போல படிப்படியாக மாறினர்.

அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை இறக்கி விட்டு ஆழம் பார்த்த விஜய்,அவர்கள் ஒருசில இடங்களில் வெற்றிவாகை சூடியதை பார்த்து நம்மளுக்கும் அரசியல் வரும் போல என்று நேரடியாக தமிழக அரசியல் களத்தில் இறங்க நீண்ட நாட்களாக ஆழம் பார்த்து வந்தார்.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் தலைவா,சர்கார் என நடித்த படங்கள் வழியாகவும் தன்னுடைய எண்ணத்தினை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த விஜயின் படங்கள் தலைவா படத்துக்கு ‘டைம் டூ லீட்’ என கேப்ஷன் வைத்து இடியாப்ப சிக்கலில் மாட்டியது. இதில் வசமாக சிக்கிய விஜய் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் கொடநாடு வரை நேரில் சென்றும் பிரச்சினை தீரவில்லை. கடைசியில் ‘தலைக்கு மேலே வெள்ளம் போன பின்’ பவ்யமாக கைகட்டி வீடியோ வெளியிட்டு அந்த கேப்ஷனையும் நீக்கி ‘தலைவா’படத்தை படாதபாடுபட்டு வெளியிட்டனர்.

தொடர்ந்து புலி, மெர்சல், சர்கார், மாஸ்டர் என அவரின் ஒவ்வொரு படத்துக்கும் பிரச்சினை வேறு வேறு ரூபங்களில் வந்து குடைச்சல் கொடுத்தது.சர்கார் படத்தில் தமிழக அரசு கொடுத்த இலவசங்களை போட்டு உடைப்பது போல காட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு சர்காருக்கு சென்ற இடமெல்லாம் சறுக்கல் என்பது போல குடைச்சல் கொடுத்தது.

சொல்லப்போனால் தலைவா படத்துக்குப்பின் வெளியான விஜய் படங்கள் அனைத்துமே சர்ச்சையில் சிக்கின. இது அவருடைய அரசியல் ஆசையை தணிப்பதற்கு பதிலாக, அதில் மேலும் எண்ணெயை ஊற்றி வார்த்தது என்று சொன்னால் அது மிகையில்லை. இதற்கு நடுவில் மெர்சல் படம் பாஜக கட்சியுடன் பிரச்சினையாகி பின்னர் அதுவே புரோமோஷனாக மாறியதால்,தற்போது அதே யுக்தியை ஒவ்வொரு படத்துக்கும் விஜய் தரப்பில் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக ‘மாஸ்டர்’ படத்தின் ஷூட்டிங் இடைவெளியில் (நெய்வேலி) மாபெரும் செல்பி எடுத்து தன்னுடைய அரசியல் ஆசையை விஜய் அணையாமல் பார்த்து கொண்டார். பதிலுக்கு வருமான வரித்துறை சோதனை அவருக்கு பரிசாக கிடைத்தது. இதற்கு ஏற்றாற்போல அவ்வப்போது ‘தளபதி 68’ படத்துடன் சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியலில் விஜய் தீவிரமாக இறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. அந்த தகவல்கள் அனைத்தும் உண்மை தான் என்பதை நேற்றைய லியோ சக்சஸ் மீட் உறுதி செய்துள்ளது.

லியோ படம் வெளியாவதற்கு முன் ஆடியோ லாஞ்ச் சிக்கல், டிரெய்லரில் கெட்ட வார்த்தை என எக்கச்சக்க பிரச்சினைகளில் லியோ சிக்கியது. டிக்கெட் மோசடிகளை காரணம் காட்டி பாதுகாப்பு பிரச்சினை என படத்தின் ஆடியோ லாஞ்ச்க்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் குட்டி ஸ்டோரி சொல்ல முடியாமல் விஜயும், கேட்க முடியாமல் ரசிகர்களும் கலங்கி தவித்தனர்.

இதெல்லாம் என்ன பிரச்சினை இதுக்கு மேல ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு என லியோ படத்தின் வசூல், இரண்டாம் பாதி பிளாஷ்பேக் என்று படம் வெளியானது முதல் நாள்தோறும் பிரச்சினைகள் வரிசை கட்டின. இதற்கெல்லாம் மேல என்பது போல தயாரிப்பு தரப்பில் இருந்தே டிக்கெட் மோசடி செய்து வசூலை அதிகரித்தது போல காட்டுகின்றனர் என்று திருப்பூர் சுப்ரமணியம் ஒரே போடாக போட்டார்.

அதுவரை கோலிவுட் ஜெயிலர் தொடங்கி ஹாலிவுட் டிகாப்ரியோ வரை அண்ணனை மிஞ்ச ஆளில்லை என ஆனந்தப்பட்ட ரசிகர்கள் எங்களால இதுக்கு மேல முட்டுக்கொடுக்க முடியல சாமி என பெருமூச்சு விட்டனர். குறிப்பாக ரஜினி ரசிகர்கள்-விஜய் ரசிகர்கள் இடையே போர் ஆமாம் போர் என்பதுபோல எல்லை மீறிய யுத்தங்கள் சமூக வலைதளங்களில் நடந்தன.

இதற்கு ஜெயிலர் பட விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா-கழுகு கதையும் ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்தது. இது எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுப்பது போல நேற்றைய சக்சஸ் மீட்டில் குட்டி ஸ்டோரி, அரசியல் ஆசை என ஒரே கல்லில் பல மாங்காய்களை விஜய் அடித்துள்ளார்.

ரஜினிக்கு பதில் சொல்வது போல காட்டில் வேட்டையாட சென்ற இருவரை உதாரணம் காட்டி பெருசா ஆசைப்படுங்க என குட்டி ஸ்டோரி மூலம் அவரின் காக்கா-கழுகு கதைக்கும் பதில் அளித்துள்ளார். உச்சகட்டமாக சமூக வலைதளங்களில் சண்டை வேண்டாம் என்றும் அவரது ரசிக கண்மணிகளுக்கு அறிவுரை சொல்லியுள்ளார்.

முதல்வன் பாணியில் நடிகர் அர்ஜுன் கேட்ட கேள்விகளுக்கு நான் என்னைக்குமே ஒரு தளபதியா இருந்து உங்களுக்கு சேவை செய்யணும்னு ஆசைப்படறேன் என்றார். சூப்பர்ஸ்டார், உலகநாயகன், தல எல்லா பட்டமுமே அவரவருக்கு உரியது என்றும் விஜய் மேற்கோள் காட்டி இருப்பது இதில் கவனித்தக்கது. இதன் மூலம் சக நடிகர்கள் மீதான மரியாதையை வெளிப்படுத்திய விஜய் ரசிக சண்டையை விட்டுவிட்டு அரசியல் களத்துக்கு வாருங்கள் என தன்னுடைய ரசிகர்களுக்கு மறைமுகமாக அறிவுரை கூறியிருக்கிறார்.

2026 பற்றிய கேள்விக்கு, ’கப்பு முக்கியம் பிகிலு’ என்ற தன் வசனத்தையே பதிலாக சொல்லி அரசியல் என்ட்ரியை அனேகமாக உறுதி செய்துவிட்டார்.

தன்னுடைய அடுத்த படத்துடன் நடிப்புக்கு தற்காலிகமாக விடுமுறை விட்டுவிட்டு அரசியலில் இறங்கி ஆதரவு திரட்டுவதை விஜய் தன்னுடைய அடுத்த டார்கெட்டாக வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இதற்கு குறுகிய காலத்தில் அமைச்சராகி திமுக கழகத்தின் அடுத்த முதலமைச்சராக பார்க்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒரு காரணமாக இருக்கலாம்.

படத்தின் வெற்றி தோல்வியை விடுத்து தமிழக சினிமாவில் விஜயின் வளர்ச்சியை பார்த்தால் அவரின் அபார வளர்ச்சி புரியும். ஒரு படம் ரிலீஸ் ஆனதற்கு பின் உடனடியாக தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு சொன்ன தேதியில் படத்தை திரைக்கு கொண்டு வருவதில் விஜயின் பங்களிப்பு மிக அதிகம்.

வெற்றி, தோல்வி என்னை பாதித்தாலும் நான் என்னுடைய வேலையை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செய்கிறேன் என அவர் ஒவ்வொரு படத்துக்கும் கடுமையான உழைப்பை கொடுக்கிறார். இதே திட்டமிடலுடன் அரசியலிலும் இறங்கினால் அவருடைய வளர்ச்சி கணிக்க இயலாத ஒன்றாக மாறலாம். வெற்றியோ, தோல்வியோ எப்போதும் போல அவர் தன்னுடைய முழு உழைப்பையும் அளிக்க தயாராக இருக்கிறார்.  அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதும், செல்லாததும் மக்களின் கைகளில் தான் உள்ளது. தளபதி விஜய் கோலிவுட்டில் கொடி ஏற்றியது போல கோட்டையிலும் கொடி ஏற்றுவாரா  என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஷாருக்கானின் “டன்கி” டீசர் வெளியானது!

கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை: சசிகலா தரப்பு வாதம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0