தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு தேதியை ஒத்திவைத்து விஜய் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடிகர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்தார். அப்போது கட்சியின் பெயரை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கட்சியின் கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கு அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் வழங்கினார்.
தொடர்ந்து மாநாட்டு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறையின் 21 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ விளக்கத்தை புஸ்ஸி ஆனந்த் தன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று விழுப்புரம் காவல் துணை கண்கானிப்பாளர் சுரேஷிடம் கடந்த 6ஆம் தேதி நேரில் வழங்கினார். ஆனால் இதுவரை இதில் காவல்துறை முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்பட்டு வந்தது.
இதுகுறித்து காவல்துறை தரப்பை தொடர்பு கொண்ட போது, தவெக மாநாட்டிற்கு காவல்துறையின் தடையில்லா சான்றிதழை (NOC) வழங்க தயாராக உள்ளதாகவும், ஆனால் அதனை பெற்றுக்கொள்ள அக்கட்சியினர் யாரும் இதுவரை வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ள தகவலை இன்று காலை 11 மணிக்கு அறிவிக்க உள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கட்சியின் மாநாட்டு தேதியை விஜய் அறிவிக்க உள்ளதாகவும், இதன் காரணமாகவே தவெக நிர்வாகிகள் என்.ஓ.சி இன்னும் வாங்கவில்லை என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Paralympics 2024: வெள்ளி வென்ற இந்திய வீரருக்கு தங்கப் பதக்கம் – காரணம் என்ன?
பட்டு வேட்டி சட்டையில் ஸ்டாலின்… சிகாகோ தமிழர்கள் உற்சாக வரவேற்பு!