விஜய் ஆஃபர்.. காத்திருக்கும் ரவிக்குமார்… வரவேற்கும் ஆதவ் அர்ஜூனா – விசிகவுக்குள் வித்தியாச கருத்துக்கள்!

அரசியல்

ஆட்சியதிகாரத்தில் அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று தவெக மாநாட்டில் விஜய் பேசியதற்கு, விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வரவேற்றுள்ளார். அதேவேளையில், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், விஜய்யை கொண்டாடவும் தேவையில்லை, நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பேசிய விஜய், தனி மெஜாரிட்டியாக நாங்கள் வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

 

குறிப்பாக, கடந்த மாதம் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா எழுப்பிய குரல், திமுக – விசிக கூட்டணிக்குள் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. விசிக தலைவர் திருமாவளவனும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது தான் விசிகவின் கொள்கை. ஆனால், தற்போது அதற்கான தேவை ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவாதங்கள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், இன்றைய மாநாட்டில் ஆட்சியதிகாரத்தில் பங்கு என்று பேசி மீண்டும் விவாதத்தை பற்ற வைத்துள்ளார் விஜய்.

விஜய்யின் இந்த பேச்சுக்கு முதல் ஆளாக விசிகவின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா வரவேற்றுள்ளார். அதேவேளையில், விஜய்யை  கொண்டாடவும் தேவையில்லை, நிராகரிக்க வேண்டிய அவசியமுமில்ல என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் விஜய்.

அவருக்கு வாழ்த்துகள். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ரவிக்குமார், “ட்ரெயிலரப் பார்த்துட்டு படத்தப் பத்தி மதிப்பிட முடியாது விஜய் நடத்திய மாநாடு, அதில் அவருடைய பேச்சு  – இத பத்தி அவர் பாணியிலேயே சொல்லணும்னா இது ஒரு ட்ரெய்லர். ஒரு சினிமாவோட ட்ரெய்லர்ல அதுல இருக்கிற முக்கியமான விஷயத்தையெல்லாம் வெட்டித் தொகுத்து மக்களை ஈர்க்கிற மாதிரி கொடுப்பாங்க.

ட்ரெய்லருடைய நோக்கம் மக்களை தியேட்டரை நோக்கி வரவழைக்கணும் என்பதுதான். அந்த மாதிரி இந்த மாநாட்டுல அவருடைய பேச்சு ஒரு ட்ரெய்லர் மாதிரி அமைஞ்சிருக்கு. முழு நீள படம்னா அது அரசியல் களத்துல அவரு எப்படி பெர்ஃபார்ம் பண்ணப் போறார் என்பதுதான்.

ஒரு படத்தை முழுமையா பாத்துட்டு தான் அதைப் பற்றிய மதிப்பீட்ட சொல்ல முடியும். ஒரு ட்ரெய்லரைப் பார்த்துட்டு இந்தப் படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடும், கோல்டன் ஜூப்ளி கொண்டாடும்னு சொல்றதோ அல்லது இந்த படம் ஃப்ளாப் ஆயிடும்னு சொல்றதோ சரியா இருக்காது.

மாநாட்டை நடத்தி இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு. அவருடைய பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்குனு பார்ப்போம். அதன் பிறகு அதைப் பற்றி சொல்லலாம். அதுக்குள்ள இந்த மாநாட்டை வச்சு அவரைக் கொண்டாடுவதும் தேவையில்லை, அவரை நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

இந்தியாவின் முதல் ராணுவ விமானம் தயாரிப்பு… டாடாவின் கனவு சாத்தியமானது!

+1
0
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *