காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்களை அங்குள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஜனவரி 20) சந்திக்கிறார். இதற்காக காலை 7.30 மணியளவில் விஜய் தனது பனையூர் இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
இந்தநிலையில், பொதுமக்களை விஜய் சந்திப்பதற்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொருளாளர் வெங்கட்ரமணனுக்கு காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் அளித்துள்ள கடிதத்தில்,

“தவெக பொருளாளர் வெங்கட்ரமணன், புதிய விமான நிலையம் அமைய உள்ள ஏகனாபுரம் கிராமத்திற்கு ஜனவரி 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தவெக உறுப்பினர்கள் சென்று அங்குள்ள பொதுமக்களை சந்திக்க அனுமதி கோரி டி.ஜி.பி. யிடமும், மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்துள்ளார்.
மேற்கண்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கிராம மக்களை சந்திப்பதற்கு தங்களுக்கு ஜனவரி 20 அன்று கீழ்கண்ட நிபந்தனைகளுடன் பரந்தூர் வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் நிகழ்ச்சி நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
1. பரந்தூர் பசுமை விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். மேலும், வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் உள்ள அரங்கின் கொள்ளத்தக்க அளவுக்கு மிகாமல் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும்.
2. சட்டம் ஒழுங்கு நலனைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
3. பரந்தூர் வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் கிராம மக்களை சந்திக்கும் நேரம் தாங்கள் கேட்டுக்கொண்டபடி காலை 11.30 மணிமுதல் 12.30 மணிக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
4. மேற்குறிப்பிட்டுள்ள இடத்தில் கிராம மக்களை சந்திக்கும்போது தங்களது கட்சியினரால் அல்லது ரசிகர்களால் பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.
தாங்கள் கோரியுள்ளபடி, மேற்சொன்ன நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் சூழலில் மட்டும் இவ்வனுமதி பொருத்தமாகும் என்றும், அவ்வாறு இல்லையெனில், இவ்வனுமதி ரத்தானதாக
கருதப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் விஜய் பொதுமக்களை சந்திப்பாரா? அல்லது திருமண மண்டபத்தில் சந்திப்பாரா என இழுபறி நீடித்து வந்தது. பாதுகாப்பு நலன் கருதி, அம்பேத்கர் திடலில் அனுமதி மறுத்த போலீசார் பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் பொதுமக்களை சந்திக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: அதிபராக பதவியேற்கும் டிரம்ப் முதல் பரந்தூர் செல்லும் விஜய் வரை!