விஜய் கூட்டும் ஐடி விங் கூட்டம்!

Published On:

| By Selvam

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஐடி விங் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு ஆயத்தமாகி வருகிறார். இதற்காக தொடர்ந்து அவர் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக மறைந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த தனது இயக்க நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவு நாள், பிறந்தநாளின் போது விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தற்போது விஜய் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார். அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அணிகளின் கட்டமைப்பை பலப்படுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணியை வலுவாக்கும் பொருட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஐடி விங் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக ஊடகங்கள் Facebook, Twitter, Youtube, Instagram, Whatsapp வாயிலாக மாவட்டம், இளைஞரணி தொண்டரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி, தொழிற்சங்க அணி, ஊடக அணி, மற்றும் நகரம், ஒன்றியம், வார்டு, பகுதி, கிளை, பூத் கமிட்டி உறுப்பினர் வரை செயல்வீரர்களாக செயல்படுவது குறித்தான (IT Wing) ஆலோசனைக் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (26.08.2023) அன்று காலை 8.55 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் தங்கள்  மாவட்டத்தில் உள்ள தொகுதிக்காக பரிந்துரை செய்த மூன்று (IT Wing) நபர்களை தவறாமல் தங்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து வந்து கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருக்கிறார்: ஹென்றி ஒலாங்கா

திமுக அமைச்சர்கள் வழக்கின் தீர்ப்பு என்னை தூங்கவிடவில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி

 

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share