விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இலவச சட்ட ஆலோசனை மையம் நேற்று (அக்டோபர் 9) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்து வரும் விஜய், மக்கள் இயக்கம் மூலமாக சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.
இதன்மூலம் விஜய் அரசியலில் களமிறங்கவும் ஆயத்தமாகி வருகிறார். குறிப்பாக கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார். மேலும், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கான சத்துணவு பொருட்களான பால், முட்டை, ரொட்டி வழங்குதல், ஏழை குழந்தைகளுக்கான இரவு நேர பயிலகம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதனிடையே வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் ஆகிய கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏழை – எளிய மக்களின் நலனுக்காக இலவச சட்ட மையம் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் நேற்று சட்ட ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏழை – எளிய மக்கள் சட்ட உதவிகள் தொடர்பாக அவதிப்படக் கூடாது என்ற அடிப்படையில், சென்னை கொடுங்கையூர் கே.கே.நகர் 6-வது தெருவில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் இந்த மையத்தில் சட்ட ஆலோசனைகளைப் பெறலாம். இதுபோல சென்னையின் இதர பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் இலவச சட்ட ஆலோசனை மையம் விரிவுபடுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் இலவச சட்ட ஆலோசனை மையம் மூலமாக மக்களுக்கு என்னென்ன ஆலோசனை வழங்கப்படும் என்று கூறினார். அதன்படி,
குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்கப்படும்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நிவாரணம் கிடைக்க அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்படும்.
கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் நபருக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்கப்படும்.
சிறுவர், சிறுமியர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு (Pocso) எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய சட்ட ஆலோசனை வழங்கப்படும்.
வங்கிக்கடன், வீட்டுக்கடன், தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்படும்.
காப்பீடு விவகாரங்கள் மற்றும் நுகர்வோர் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்.
வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்கப்படும்.
நிறுவனங்களின் நடவடிக்கையால் திடீர் பணி நீக்கம், ஓய்வூதியத் தொகை கிடைப்பதில் சிக்கல் உள்ளிட்ட தொழிலாளர் நலத்துறை தொடர்பான
விவகாரங்களில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்படும்.
சட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுதல்.
அந்தந்த பகுதிகளில் உள்ள பொது பிரச்சினைகளுக்கு சட்டரீதியாக தீர்வு காண வழிவகை செய்வது. (உதாரணமாக சாலை வசதி, பொது மயானம், குடிநீர் வசதி கிடைக்க போராடும் மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது).
விஜய் மக்கள் இயக்கத்தின் இலவச சட்ட ஆலோசனை மையம் முதலில் மாவட்ட அளவிலும், பின்னர் தொகுதி வாரியாகவும் இலவச சட்ட மையங்களை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஆலோசனை மையத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவரும், இளைய வழக்கறிஞர் இருவரும் (ஒருவர் பெண்) இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பற்களை பளபளவென வெள்ளையாக்குவது எப்படி? இதோ வீட்டில் ஈஸியா செய்து பாருங்கள்!
நீண்ட போருக்குத் தயார்: ஹமாஸ் அறிவிப்பு!
ஹமாஸ் பாலஸ்தீனத்தின் பிரதிநிதி அல்ல… இஸ்ரேலுக்கு முழு ஆதரவு: அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூட்டறிக்கை!
வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடி: ஸ்டாலின் அறிவிப்பு!