கட்சி தொடங்கும் முன்பே வாக்காளர் பட்டியல் பணிகளில் விஜய்

Published On:

| By Manjula

லியோ சக்சஸ் மீட்டில் தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளதை தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மூலமாக நிரூபித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று, நாளை (நவம்பர் 4, நவம்பர் 5) மற்றும் நவம்பர் 18,19 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல்  திருத்த  முகாம்கள் நடைபெறுகின்றன.

இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்காக இதுவரை 36,142 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இந்த வாக்காளர் பெயர் திருத்த சிறப்பு முகாம்களில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி களப்பணியாற்றி வருகின்றன. இதற்காக கட்சி உறுப்பினர்கள் அமர்ந்து பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கமும் இந்த வாக்காளர் திருத்த பட்டியலில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வாக்காளர் பெயர் பட்டியல் நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை வெளியிட்டு இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு இயக்கத்தின் சார்பில் பிளெக்ஸ் அடித்து  அதற்கான பணிகளிலும் இன்று விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, ‘கப் முக்கியம் பிகிலு’ என்று விஜய் பிரகடனம் செய்த லியோ ஆடியோ லாஞ்ச் புகைப்படங்கள் அதிகமாக இடம்பெற்று இருக்கின்றன. இதனால் விஜய் நேரடி அரசியலில் விரைவாக களமிறங்கி, 2026-ம் ஆண்டு தமிழக தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக களம் காணுவார் என்பது மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சில கட்சிகள் கூட இன்னமும் வாக்காளர் பட்டியல் பணிகளை மேற்கொள்ளாத நிலையில்…  கட்சி ஆரம்பிக்கும் முன்பே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது விஜய் மக்கள் இயக்கம்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

வாகனங்களுக்கு அபராதம்: வேக கட்டுப்பாடு இன்று முதல் அமல்!

’1 Year of Love Today’: ஸ்பெஷல் வீடியோ வெளியானது!