அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய்யின் அரசியல் முகூர்த்தம்!

சட்ட மாமேதை புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், புரட்சியாளரின் பிறந்த நாள் விழாவை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமரிசையாக கொண்டாட உள்ளனர்.

நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதற்கான அடித்தளங்களை பலமாக்கி வருகிறார். அந்தவகையில், அரசியலில் ஈடுபடுவதற்காகவே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். தனது ரசிகர் மன்றத்தின் பெயரை ’விஜய் மக்கள் இயக்கம்’ என்று மாற்றியதுடன், இரத்த தானம் , அன்னதானம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரசிகர்களை வைத்து செய்து வருகிறார்.

இந்த சூழலில், கடந்த 2020 ஆம் ஆண்டு மாஸ்டர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த வேளையில், நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தின் வியாபாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக நெய்வேலி படப்பிடிப்பு தளத்திற்கே சென்ற வருமானவரித்துறை, விஜய்யை அவரது பனையூர் வீட்டிற்கு கையோடு அழைத்துச்சென்று விசாரித்தது.

விடிய விடிய சோதனை என தொடர்ந்த வருமான வரித்துறையினரின் அப்டேட், விஜய் வீட்டில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்ற விளக்கத்துடன் முடிந்தது. வருமானவரித்துறை பரபரப்பிற்கு பின் மீண்டும் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

அப்போது எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அழைப்பும் ரசிகர்களுக்கு கொடுக்கப்படாத போதும் விஜய்க்காக கூடிய அந்த மக்கள் படை தமிழக அரசியல்வாதிகளை பயமுறுத்தியது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அங்கு விஜய் ரசிகர்கள் கூடினர்.

அப்போது ஷூட்டிங் வேன் மீது ஏறி நடிகர் விஜய் எடுத்த செல்பி ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆனது. தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகள் தொண்டர்களை பொதுக்கூட்டத்திற்கு பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை கொடுத்து அழைத்தாலும் இப்படி ஒரு கூட்டம் கூடாது என்றனர் விஜய் ரசிகர்கள்.

இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய் பல்வேறு சமூகப்பிரச்சனைகளுக்கு நேரடியாக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வினால் உயிர் இழந்த மாணவி அனிதாவின் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதே போல் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகத்தில் மாஸ்க் கட்டிக்கொண்டு கலந்து கொண்டார்.

இந்நிலையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய் மக்கள் இயக்கத்தினர்…தேர்தல் அரசியலிலும் பங்கேற்ற வேண்டும் என்று விரும்பினார். அதன்படி கடந்த முறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு 2 ஊராட்சி தலைவர்கள், 15 ஊராட்சிமன்றத் துணைத்தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என மொத்தம் 129 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரையும் நடிகர் விஜய் நேரில் அழைத்து பாரட்டினார்.

அப்போது, “இந்த வெற்றியை மக்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்துங்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். பின்னர், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமானோர் வெற்றி பெற்றனர்

இதில் எந்த இடத்திலும் விஜய் நேரில் சென்று ஓட்டு கேட்கவே இல்லை. ரசிகர் மன்றத்தினருக்கு வாக்களியுங்கள் என்று விஜய் ஒரு அறிக்கைகூட விட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அவ்வப்போது தனது மக்கள் இயக்கத்தினரை நேரில் அழைத்து விஜய் ஆலோசனையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் நாளை அம்பேத்கர் பிறந்தநாளை (ஏப்ரல் 14) விஜய் மக்கள் இயக்கம் விமர்சையாக கொண்டாட உள்ளது.

நாளை தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் அம்பேத்கர் சிலை, உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதோடு நில்லாமல், வரும் 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தமிழ்நாடு அமைச்சராக உள்ள உதயநிதி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் நேரத்தில் தான் விஜய்யின் நேரடி அரசியல் என்ட்ரி இருக்கும் என்று தனது நிர்வாகிகளிடம் விஜய் சொன்னதாக ஏற்கனவே மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஒருவேளை உதயநிதி தலையெடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரமே தனக்கும் உகந்த நேரம் என்று விஜய் நினைத்துவிட்டாரோ… அம்பேத்கர் மூலம் அரசியல் முகூர்த்தம் குறித்திருக்கிறார்.

மாவட்டத் தலைவர்கள் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்த உத்தரவிட்டது போல, விஜய்யும் அம்பேத்கருக்கு நாளை மரியாதை செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பத்திரப் பதிவு மோசடி: அறப்போர் புகாருக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் விளக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts