தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் எந்த பொறுப்பிலும் இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை ஜூலை 28-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கினார். மதுரை முனிசாலை பகுதியில் அண்ணாமலை நேற்று நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைவர் ஜே.கே.பத்ரி சரவணன் தலைமையில் 10 பேர் வந்திருந்தனர்.
அவர்கள் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கொடுத்தனர். அப்போது அவர்கள், “நடிகர் விஜய்யும் அண்ணாமலையும் சகோதரர்கள் போன்றவர்கள். இருவரும் ஊழலற்ற ஆட்சியை கொடுப்பார்கள். வருங்கால பிரதமர் மோடி, வருங்கால முதல்வர் விஜய்” என்று கோஷமிட்டனர்.
இந்தசூழலில் அண்ணாமலை நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வம்
குப்பை மேட்டில் மருத்துவக் கழிவுகள்: டிரைவர்கள் தப்பியோட்டம்!