தொகுதி வாரியாக நியமனம்: விஜய் மக்கள் இயக்க மகளிரணி கூட்டத்தில் முடிவு!

அரசியல்

விஜய் மக்கள் இயக்கம் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் இன்று (செப்டம்பர் 9) காலை பனையூரில் தொடங்கியுள்ளது.

அடுத்த மாதம் வெளியாக உள்ள லியோ மற்றும் உருவாகி வரும் தளபதி 68 என தனது திரைப்பட பணிகளுக்கு மத்தியில் நடிகர் விஜய், அரசியல் களத்திலும் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளார்.

குறிப்பாக  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 120க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ரசிகர்கள் சந்திப்பு கூட்டம், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டது.

அதன்பின்னர் இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் அணி, ஐ.டி. அணி என தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன.

தற்போது நடிகர் விஜய் தளபதி 68 படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றுள்ளனர்.

மகளிரணி செயல்பாடு முக்கியம்!

கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “இங்கு வந்திருக்கும் மகளிர் அணியைச் சேர்ந்த அனைவருக்கும் தளபதி விஜய் சார்பாக உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். விஜய் பயிலகத்தில் அதிகளவில் பெண்களே பணியாற்றுகின்றனர்.

மக்களிடம் விஜய் மக்கள் இயக்கத்தை மதிப்பை அதிகரிக்க மகளிரணி செயல்பாடு முக்கியம். வரும் நாட்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை மகளிரணி தீவிரப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி இயக்கத்தை வளர்ச்சிக்காக  நீங்கள் ஒவ்வொருவரும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்” என்று புஸ்ஸி ஆனந்த் பேசினார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிற அணிகளை காட்டிலும் மகளிர் அணியை சிறப்பாக கட்டமைக்க நடிகர் விஜய் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகின.

அதன் அடிப்படையில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் முழுமையாக நியமிக்கப்பட்ட பிறகு, தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை விரைந்து நியமிக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலூட்டும் அறை!

முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்காக தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் நிர்வாகிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சொந்த ஊரில் மாரிமுத்து உடல்: கதறி அழும் உறவினர்கள்!

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

 

+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *