வெற்றிச் சாலை… விவேகச் சாலை… வியூகச் சாலை… விஜய்யின் கடித அரசியல்! 

அரசியல்

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய அரசியலையும் கடிதத்தையும் யாரும் பிரிக்க முடியாது.

இந்தியாவின் இரும்பு மங்கையாக இன்றும் கருதப்படும் இந்திரா காந்தி 10 வயது பெண்ணாக இருந்தபோது அவரது தந்தையார்  பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் இருந்தார்.

1928 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சிறையில் இருந்து தன்னுடைய 10 வயது மகள் இந்திரா காந்திக்கு நேரு எழுதிய கடிதங்கள் உலகப் புகழ் பெற்றவை.

சிறுமி இந்திரா காந்தியை,  நாம்  போற்றிப் புகழும்  அன்னை இந்திரா காந்தியாக மாற்றி அமைத்ததற்கு, நேருவின் அந்த கடிதங்கள்தான் முக்கிய காரணம். தான் சிறையில் இருந்தபோதும், உலகத்தை தன் மகள் இந்திரா காந்திக்கு கடிதங்கள் மூலம் அறிமுகப்படுத்தினார் நேரு.   Letters from a Father to His Daughter  என்ற தலைப்பில் நேரு எழுதிய அந்த கடிதங்கள் நூலாக வெளிவந்தன.  ஹிந்தியில் ‘பிதாக்கி பத்ரா புத்ரிக்கு நாம்’ என்று மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.  வட மாநில மக்களிடம் பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்தியது.

இந்திய அரசியலில் நேருவின் கடிதங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால்… தென்னாட்டு அரசியலில் குறிப்பாக தமிழ்நாடு அரசியலில் பேரறிஞர் அண்ணாவின் ‘தம்பிக்கு…’  கடிதங்கள்  அரசியலையே புரட்டிப் போட்டன. இன்னும் சொல்லப்போனால் மெட்ராஸ் ராஜதானி என்பதை புரட்டிப் போட்டு,  ’தமிழ்நாடு’ என பெயர் மாறுவதற்கான ஆட்சியை அண்ணாவுக்கு அளித்ததும் அந்த கடிதங்கள் தான்.

அண்ணாவின் அடிச்சுவட்டில் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள், ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.

50 ஆண்டுகால அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் இன்றைக்கும் ‘அரசியல் கடித இலக்கியமாக’ திகழ்கின்றன கலைஞரின்  கடிதங்கள்.

அதே வகையில் இப்போதைக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், ’உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் இன்று வரைக்கும் அவ்வப்போது உடன்பிறப்புகளுக்கு கடிதங்களை எழுதி வருகிறார்.

இப்படி கடிதம் என்பது வெறும் வாக்கியங்களாக அல்லாமல், தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்தும் மொழிக் கயிறுகளாகவே விளங்கி வந்திருக்கின்றன.

இப்பேற்பட்ட அரசியல் கடித பாரம்பரியம் கொண்ட இந்தியாவில்… இதோ தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும் தனது தோழர்களுக்கு மூன்று கடிதங்களை எழுதி இருக்கிறார்.

அரசியல்வாதி என்றாலே அறிக்கை விட்டுவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள் என்பது தான் பொதுப் புத்தியில் உறைந்த படிமமாக இருக்கிறது.

விளித்தல் என்ற… அதாவது எதிரே இருப்பவர்களை பார்த்து அழைப்பது என்ற ஓர் உணர்வுபூர்வமான பந்தத்தை அறிக்கை ஏற்படுத்தாது.  அதனால்தான் மாற்றத்தை உருவாக்கிய மாபெரும் தலைவர்கள் கடிதம் என்னும் வடிவத்தை கையில் எடுத்தனர். அதன் மூலம் மக்களிடம் உறவாடினர்.

இந்த வரிசையில் தான், விஜய் அக்டோபர் 27ஆம் தேதி நடக்க இருக்கும் தனது முதல் அரசியல் மாநாட்டுக்காக மூன்று கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

அக்டோபர் 4 ஆம்  தேதி விஜய், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே…’ என்ற விளித்தலோடு எழுதிய முதல் கடிதத்தில்,

‘நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம், குதூகலம் இருக்கலாம், ஆனால் படை அணியினர் ஓரிடத்தில் கூடினால் அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமல்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்து காட்ட வேண்டும்.

இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர்.  இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும்போது தான் அவர்களுக்கு புரியும்’

என்று தன் கட்சி தோழர்களுக்கு பல அறிவுரைகளை சொன்ன விஜய் அந்த முதல் கடிதத்தை முடிக்கும் போது… ‘வி. சாலை என்னும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம்’ என்று முடித்திருந்தார்.

அடுத்ததாக இந்த மாநாட்டை ஒட்டி அவரது இரண்டாவது கடிதம் அக்டோபர் 20ஆம் தேதி எழுதப்பட்டது.

அந்தக் கடிதத்தில் தான், “கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி சிறுவர்- சிறுமியர், நீண்ட காலமாக உடல் நலமின்றி  இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வர திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன்.

ஆனால் எல்லாவற்றையும் விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டுக்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணம் அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்று அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  வீடுகளில் இருந்தே சமூக ஊடகங்கள் வழியாக மாநாட்டில் கலந்து கொள்ளலாம்’ என்று ஒரு வித்தியாசமான அறிவிப்பை தனது இரண்டாவது கடிதத்தில் எழுதினார் விஜய். தனது முதல் மாநாட்டில் முகம் சுளிக்க வைக்கும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வும் இந்தக் கடிதத்தில் இருந்தது.

அதனால்தான், இந்த கடிதத்தை முடிக்கும் போது, ‘வி. சாலை என்னும் விவேகச் சாலையில் சந்திப்போம்’ என நிறைவு செய்திருந்தார்.

விஜய்யின் மூன்றாவது கடிதம் இன்று அக்டோபர் 25ஆம் தேதி எழுதப்பட்டிருக்கிறது.

“உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கை திருவிழாவை.

பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்’ என்று கடிதத்தில் கூறியுள்ளார் விஜய்.

இந்த மூன்றாவது கடிதத்தை, ‘வி. சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்’ என்று நிறைவு செய்திருக்கிறார்.

முதல் கடிதத்தை முடிக்கும் போது வெற்றிச்சாலையில் சந்திப்போம் என்றும்… இரண்டாவது கடிதத்தை முடிக்கும் போது விவேகச் சாலையில் சந்திப்போம் என்றும், மூன்றாவது கடிதத்தை முடிக்கும் போது வியூகச் சாலையில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசும்போது… “இது ஒன்றும் வார்த்தை விளையாட்டு அல்ல. வெற்றிக்காகத்தான் மாநாட்டுக்கு வருகிறோம் என்பதை  முதல் கடிதம் மூலமாக  பதிய வைத்து, அந்த வெற்றிக்கு விவேகமுடன் உழைக்க வேண்டும் என்பதைச் சொல்லி… வெற்றிக்கான வியூகத்தை இந்த மாநாட்டின் மூலம் நிறுவுவோம் என்பதுதான் விஜய் சொல்கிற செய்தி” என்கிறார்கள்.

விவேகம்-வியூகம்  இரண்டும் சேர்ந்த வெற்றிச் சாலையாக மாநாடு  அமைய வேண்டும் என்பதுதான் விஜய்யின் விருப்பம்!  அவரது தோழர்கள் நிறைவேற்றுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-ஆரா

தலைமைச் செயலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? : உதயநிதி பதில்!

“வதந்தியை கிளப்புவர்கள் மெச்சூரிட்டி இல்லாதவர்கள்” : ஜெயம் ரவி காட்டம்!

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *