”திமுக மன்னராட்சியை நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சியைத்தான் நடத்துகிறது. வாரிசு அரசியல் இல்லை. உழைப்பினால்தான் வந்துள்ளோம்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பிளஸ்ஸை மைனஸ் ஆக்கும் வல்லமை யாருக்கும் கிடையாது!
அவர், “கூட்டல், கழித்தல் விஜய்க்கு தெரியாமல் இருக்கலாம். பிளஸ் எல்லாம் மைனஸ் ஆகும் என எந்த விதத்தில் கூறுகிறார். சினிமா துறையில் வேண்டுமென்றால் மிகப் பெரிய ஹீரோ, ஹீரோயின், மிகப்பெரிய தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்து பிளஸ்சும் இருக்க கூடிய திரைப்படம் தோல்வியடையும்.
ஆனால் அரசியலில் எந்த பிளஸ்ஸும் மைனஸ் ஆக வாய்ப்பு கிடையாது. பிளஸ்ஸை மைனஸ் ஆக்கும் வல்லமை விஜய்க்கும் கிடையாது, யாருக்கும் கிடையாது. இது யாராலும் போட முடியாத கணக்கு. கடன் வாங்கி கணக்கு போடுபவர்கள் வேண்டுமானால் அவ்வாறு கூறலாம். நாங்கள் கடன் வாங்கி கணக்குப் போடவில்லை. எங்கள் சொந்த கணக்கை வைத்து போடுகிறோம்.
திருமா திமுக கூட்டணியில் உள்ளார்!
தன்னோடு விசிக தலைவர் திருமாவளவன் வருவார் என்பது நடிகர் விஜய்யின் விருப்பமாக இருக்கலாம். திருமாவளவனுக்கு விருப்பமிருந்தால் நேற்று அவர் போயிருப்பார். ஆனால், திமுக கூட்டணியில்தான் இருக்கிறேன் என்று திருமாவளவன் தெளிவாக கூறிவிட்டார்.
திமுகவில் வாரிசு அரசியல் இல்லை!
திமுக மன்னராட்சியை நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சியைத்தான் நடத்துகிறது. வாரிசு அரசியல் இல்லை. உழைப்பினால்தான் வந்துள்ளோம். திமுகவின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்றுக்கொண்ட தலைவர்தான் ஸ்டாலின். அதேபோலதான், உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை ஏற்றுக்கொண்டு தொண்டர்களின் வலியுறுத்தலினால் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. வாரிசு என்ற அடிப்படையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வரவில்லை.
மு.க.ஸ்டாலின் தான் கருத்தியல் தலைவர்!
அரசியலில் யாருக்கு வேண்டும் என்றாலும் பதில் சொல்லலாம். அதற்கு தகுந்த நேரம் வரவேண்டும். இன்றைக்கு விஜய் அந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறாரா என்றால், இல்லை என்பதுதான் எங்களுடைய கணக்கு புள்ளிவிவர கணக்குப்படி நாங்கள் 48 சதவீதம் வளர்ந்துள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் திமுகவின் மாடலை முன்னெடுத்து செல்லக்கூடிய கருத்தியல் தலைவர்.
வேங்கை வயல் விவகாரத்தில்…
வேங்கை வயல் விவகாரத்தில் நீதியரசர் சத்திய நாராயண கமிஷன் நியமித்துள்ளோம். டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசாங்க முறைப்படி இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை.
இதில் அமைச்சரோ, எம்எல்ஏவோ குறிக்கீடு செய்யவில்லை. அங்கிருக்கும் சாதி அரசியலை வைத்துக்கொண்டு கற்பனை செய்து கொண்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
டிஎன்ஏ பரிசோதனை ஒத்துப் போகவில்லை. இனிமேல் கிராமத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனை செய்துதான் பார்க்க வேண்டும். அதையும் வேண்டுமென்றால் செய்வோம்.
உதயநிதி கேட்டதில் தப்பில்லை
ஆதவ் அர்ஜூனா ஒரு கட்சியில் இருக்கிறார். அக்கட்சியின் கொள்கை, கூட்டணி எல்லாம் தெரிந்து கொண்ட பிறகும் அதற்கு எதிராக பேசுகிறபோது அறிவில்லையா என்று உதயநிதி கேட்டதில் தப்பில்லை.
கூட்டணியை விமர்சிக்கும் வகையில் விசிக ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக விசிகவில் இருந்து அவரை நீக்குவதெல்லாம் அந்தக் கட்சியின் உள் விவகாரம். அதைப் பற்றி எதையும் நாங்கள் வெளியில் இருந்து அந்தக் கட்சிக்கு ஆலோசனை கூற முடியாது.
திமுக சக்திவாய்ந்த கட்சி; நாதக சாதாரணமான கட்சி!
வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும், தனிமனித உரிமையை காப்பாற்றிக் கொள்ள சீமானுக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கையில் அவருடன் நேரடியாக மோதுவதற்கு எங்களுக்கு என்ன பயம்?
நாங்கள் சக்திவாய்ந்த கட்சி. நாதக சாதாரணமான கட்சி. அவர்கள் இப்போதுதான் மூன்றாவது இடத்திற்கு வந்திருப்பதாக சீமானே கூறுகிறார். கட்சியில் இருந்த அனைவரும் அவரை விட்டு சென்றுவிட்டனர்.
அதானி ஒப்பந்த விவகாரம்!
மத்திய அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அதானியோடு அதிமுக ஆட்சியில்தான் கடந்த 2014-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதே தவிர, திமுகவில் அல்ல” என ரகுபதி தெரிவித்துளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
”நானும் இறுமாப்போடு சொல்கிறேன்” : விஜய்க்கு கனிமொழி பதில்!
நான் தடுமாறுகிறேனா? திருமாவளவன் பதில்!
பிளாஸ்டிக் ஸ்மைல்: ஐஸ்வர்ராயுடன் காதல் முறிவு ஏன்? மனம் திறந்த விவேக் ஒபராய்