தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்தார் விஜய் : கொடி சொல்லும் செய்தி என்ன?

Published On:

| By christopher

Vijay introduced Tamil Nadu vetri kazhagam flag: What are the special features?

சிவப்பு,  மஞ்சள் வண்ணங்கள் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகப்படுத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று அறிவித்தார்.

அதனையடுத்து இன்று காலை முதலே பனையூரில் 300க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் குவிந்தனர். மேலும் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் வருகை தந்தனர்.

சரியாக காலை 9.15 மணியளவில் கட்சி நிர்வாகிகளின் பலத்த கோஷத்திற்கிடையே பனையூர் அலுவலகத்திற்கு நடிகர் விஜய் காரில் வருகை தந்தார்.

முதலில் அரங்கில் இருந்த தனது பெற்றோரை சந்தித்து ஆசி பெற்ற விஜய், மேடையில் எந்தவிதமான தனி இருக்கையும் அமைக்கப்படாத நிலையில் நிர்வாகிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த இடத்தில் முதல் வரிசையில் அமர்ந்தார்.

தொடர்ந்து கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றிய நிலையில், நெஞ்சில் கையை வைத்தபடி விஜய் தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி கம்பத்தில் கொடி ஏற்றினார்.

Image

மேலும், கீழும் அடர்சிவப்பு நிறம் இருக்க, நடுவில் மஞ்சள் நிறத்துடன் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொடியின் நடுவில் இருபக்கமும் போர் யானை இருக்க, நடுவில் வட்ட வடிவில் வெற்றியை குறிக்கும் வாகை மலர் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள் இருக்கும் வகையில், ‘தமிழ் கொடி பறக்குது… தலைவன் யுகம் பிறக்குது” என தொடங்கும் கொடிப் பாடல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கொடி அறிமுகம் : தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி என்ன?

களைகட்டும் தவெக கொடி அறிமுக விழா : விஜய்க்கு சீமான் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share