தமிழக வெற்றிக் கழக மாநாட்டை நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, தவெக தலைவர் விஜய் இன்று (நவம்பர் 23) விருந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்றது.
பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் 4 லட்சம் பேர் வரை கலந்துகொண்டதாக காவல்துறை தரப்பில் சொல்கிறார்கள். மாநாடு நடத்துவதற்காக விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில், விவசாயிகள் மற்றும் பல்வேறு நில உரிமையாளர்களிடமிருந்து சுமார் 175 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஏக்கர் ஒன்றிற்கு விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் வாடகை தொகை வழங்கப்பட்டது. மேலும், அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் என சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பணத்துடன் கறவை மாடும் வழங்கப்பட்டது.
மாநாட்டிற்காக அனைத்து விவசாயிகளையும் நேரில் சந்தித்து புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்தார். மாநாடு முடிந்த பிறகும் அனைவரையும் வீடு தேடிச்சென்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்தநிலையில், மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகள், நில உரிமையாளர்கள் என 46 குடும்பங்களுக்கு சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் இன்று விருந்து அளிக்கிறார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பனையூரில் உள்ள விஜய் அலுவலகத்திற்கு 2 பஸ் மற்றும் ஒரு வேனில் 120-க்கு மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர். அவர்களை கட்சியின் அலுவலக வாசலில் நின்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார்.
தொடர்ந்து நிலம் வழங்கிய விவசாய குடும்பங்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார் விஜய். பின்னர் அனைவரும் வேட்டி, சேலை வழங்க இருக்கிறார். அவர்களுக்கு வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் என தடபுடலாக மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாமகவைச் சேர்ந்த விவசாய குடும்பங்களும் கலந்து கொண்டனர் என்கிறார்கள் தவெக வட்டாரத்தில்.
தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக இயங்கி வரும் விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நாளை (நவம்பர் 24) செர்பியா நாட்டுக்கு செல்கிறார்.
டிசம்பர் மாதம் முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் விஜய், அடுத்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்கள் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட இருப்பதாக சொல்கிறார்கள் தவெக நிர்வாகிகள் வட்டாரத்தில்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாய்லட் போயிட்டு வர்றதுக்குள்ள டெல்லி, நியூயார்க் போயிடலாமா?